Friday, July 23, 2010

37.பால் காவடி

பால்காவடி பூக்காவடி பழக்காவடி எடுத்தே
பாலனே பதம் பணிந்தோம் பழனிமலை ஆண்டவனே

மாங்கனிக்காக சினங்கொண்டகன்றே
மலை ஏறி ஆண்டியாக நின்ற குமரனே
பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா என்றே
அழைத்த தமிழ்ப்பாட்டிக்குகந்த குமரா வேலனே

பாலமுருகனே சரணம் பழனி முருகனே
வேலேந்தி வினை தீர்ப்பாய் வேங்கடன் மருகனே
ஆறுமுகனே ஐயா அழற்பிறந்தோனே
ஆறுபடை வீடு கொண்ட அழகுமுருக பாலனே

மலை ஏறி வந்து நின்றோம் மயில்வாகனனே
மாறாத பிலலிசூனியம் மலையேறி தொலைந்திடவே
கந்தசஷ்டி கவசம் கூறி கைகூப்பி நின்றோமே
கண்காணா தீவினைகள் காததூரம் அகன்றிடவே

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Thursday, July 8, 2010

12.கருவறையில் இருளொளியில்

கருவறையில் இருளொளியில்
இருந்த காலம் நம் நினைவிலில்லை
காலால் தாய்வயிற்றில்
உதைத்ததும் நம் நினைவிலில்லை
உருவாகி வெளிஉலகம்
கண்ட நேரம் நினைவிலில்லை
முதன்முதல் யாரைக்கண்டோம்?
பெற்ற தாயையா ? மாற்றாந்தாயையா
அழுததும் நம் நினைவிலில்லை தாயின்
அணைப்பில்உறங்கியதும் நினைவிலில்லை
பாலூட்டி நம்மைத் தாலாட்டிய
காலம் ஒன்றும் நம் நினைவிலில்லை
மூவிரண்டு வயதுவரை வாழ்ந்த
வாழ்க்கை நம் நினைவிலில்லை
கற்பனையில் இப்பொற்காலம்
கோபுரமாய் உயருதம்மா!
வாலிபப்பருவமும் இனிய
தோழமைக்குழாமும்
பொலிமைமாறாத பொன்னோவியமாய்
இன்றும் நம் நினைவிலுண்டு
வளர்ந்தபோது வாழ்க்கையின்
திசை அங்கு மாறியதும்
காதலில் கனிந்து துணையுடன்
அலிந்து சேர்ந்த காலமதும்
கல்வெட்டு போன்று மறையாது
நம் மனதில் நினைவிலுண்டு
நேசித்த உறவுகள் ஒவ்வொன்றாய்
அங்கு மறையும் நேரம்
பாசவலை அறுந்ததுவோ? மனம்
பதப்பட்டு இறுகிய்தோ
பார்வைக்கு இவ்விரண்டும்
ஒன்றுபோல கான்பதேனோ ?
கனிவும் தெளிவும் வாழ்க்கை
கற்றுத்தரும் பாடமாகும்
கல்லறையில் கிடக்கும்வரை
நம் மனதில் நிற்க வேண்டும்
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Sunday, July 4, 2010

11. காற்றிக்கு என்றொரு வாசல் இல்லை

காற்றிக்கு என்றொரு வாசல் இல்லை
மண்ணிற்கு என்றொரு மணமில்லை
காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை
கடல்நீரால் தாகம் தணிவதில்லை

நீரை அடித்தால் வேறாவதில்லை
குற்றம் காண்போருக்கு சுற்றமில்லை
காண்பதை எல்லாம் நம்புதற்கில்லை
வேகமும் விவேகமும் நண்பர்களில்லை

ஆணவம் ஆயுதமாவதில்லை
நாவினால் சுட்ட புண் ஆறுவதில்லை
வினை விதைத்தவன் தினை அறுப்பதில்லை
நஞ்சின் சுவை கண்டு வாழ்ந்தவரில்லை

தாயுள்ளம் ஒருபோதும் சபிப்பதில்லை
தாய்மைக்கு சேய் ஒரு பாரமில்லை
பிஞ்சு நெஞ்சில் என்றும் வஞ்சம் இல்லை
வஞ்சித்தவர் மகிழ்வு நீடிப்பதில்லை

ஆழ்மனம் என்றும் உறங்குவதில்லை
ஆழ்கடலின் ஆழம் கண்டவரில்லை
ஆறாத சினத்தால் ஆரோக்கியமில்லை
அன்பினால் ஆகாதது ஒன்றுமில்லை

ஆகாசம் பூமியைத் தொட்டதில்லை
ஆராய்ந்து பார்த்தால் மெய் தப்புவதில்லை
தன்னை அறிந்தால் மனதில் அகந்தை இல்லை-கண்ணனை
தினம் நினைந்தால் குழலோசை கேட்காமலில்லை
All rights reserved for the poem. Leela Narayanaswamy©