Monday, September 10, 2012

ஸ்ரீமத் பகவத் கீதை (சுருக்கமாக)

காப்பு

ஆதிமுதல்வனே அருள்மிகு விநாயகா
வேழமுகத்தோனே வேங்கடன் மருகனே
வினை தீர்க்கும் வித்தகனே வேண்டினேன் உன்னையப்பா
இடையூறு களைந்துதவ இங்கே எழுந்தருள்வாய்

வேறு

வேதசாரமாம் கீதைதனை இங்கு
கீதமாய் நாம் கூடி பாடிடுவோம்
சோதனை வேதனை நிறைந்த வாழ்விலே
சோர்விலா இன்பம் அடைந்திடுவோம்

அத்தியாயம் 1

அரசகுலத்தோராம் பாண்டவர் கௌரவர்
அரியணைக்காக வேறாகி நின்றனர்
பாண்டவர் தூதனாய் சென்றான் கண்ணன்
பரிந்துரைத்து போரை ஒழிவாக்க நினைத்தான்

ஆணவம் ஆத்திரம் கண்ணை மறைத்திட
அற்பர் கௌரவர் முதிர்ந்தனர் போரிட
பார்த்தனுக்காக தேரோட்டினான் கண்ணன்
கௌரவர் நின்றனர் பீஷ்மர் தலைமையில்

எதிரிகளாய் நின்ற உறவுகளைக் கண்டே
பதறினான் பார்த்தன் கதறினான் கண்ணனிடம்
பாபச்செயல் இது உறவோடு பகை வேண்டா
கோபம் குரோதம் கொண்டு போரிட வேண்டா

ஆசிரியர் துரோணர் பெரியவர் பீஷ்மர் இவர்
கேசவா தவறிது போரிட வேண்டா என்றான்
அரசபோக ஆசை வைத்து அற்பனானேன்
அழிவது என்குலம் என்ற அறிவிழந்தேன்

கலங்கிய கண்களுடன் காண்டீபம் கீழே வைத்தான்
குலநாசம் செய்தோர் வாழ்வு வேண்டாமென்றே
குழப்பமும் இரக்கமும் ஒருசேர நின்றான் பார்த்தன்
இழப்பில் இன்பமுண்டோ சொல்வாய் கண்ணா என்றான்

அத்தியாயம் 2 - சாங்க்ய யோகம்

நிலைகுலைந்து தேரில் இருந்துவிட்ட பார்த்த்னிடம்
நிலையாமை இறவாமை எவை என அறிகிலையோ
நிதானம் கொள்வாய் எனக்கண்ணன் கூறினான்
அழிவது உடலாகும் அழிவில்லை ஆன்மாவிற்கு

போற்றிவளர்த்த உடல் அழியும் என்ற உண்மை
மாற்றமுடியாததை மனிதனால் அறிவாய்
அரசகுல தர்மமாகும் போரிடல் என்றறிவாய்
அடையும் வெற்றிதோல்வி சமமாக ஏற்றிடுவாய்

குலதர்மம் செய்யாமல் குழம்பி நின்றால் உன்னை
உலகம் பழிக்கும் அது தீராத நரகம் ஆகும்
எது தேவை என்றறிவாய் வேதங்களை நன்கறிவாய்
எதிலும் பற்றற்று குலதர்மம் காத்து நிற்பாய்

மனிதனின் நிலைகொள்ளா மனம் அவன் எதிரியாகும்
நினைப்பதில் ஆசைகொண்டு அதனால் மோகம் கொண்டு
தனைமறந்து தடுமாறி பகுத்தறிவு இழந்து விடும்
ஐம்புலன்கள் மனதை தன்வசம் ஆக்கிவிடும்

ஐம்புலனின் செயலாகும் இன்பதுன்பமென்றறிவாய்
ஐயமின்றி அறிவாய் நிலையற்றதாகும் இவை
இன்பதுன்பங்களில் சமநோக்கு பாவித்து
ஆசைபயம் கோபம் இவை இல்லா முனியாம்

ஸ்திதப்ரஜ்ஞனாக நீ கர்மம் செய்திடுவாய்
இதுவே பிரம்மஞான நிலை முக்தி தரும் உச்ச நிலை

அத்தியாயம் 3 - கர்ம யோகம்

கர்மமின்றி மனிதனில்லை அறிவாய் அர்ஜுனா
கர்மபல மோகமின்றி கர்மம் செய்திடுவாய்
அன்னம் முதல் வேதம் வரை ஆராய்ந்தாலோ
அழிவற்ற பிரம்மத்தில் வேதம் நிலை கொண்டிடுமே

அரசன் எவ்வழியோ அவ்வழி மக்கள் என்பார்
ஆதலால் அர்ஜுனா கர்மம் செய்ய தயங்காதே
முக்குணங்கள் கர்மத்தின் காரணிகள் என்றறிவாய்
கர்மகுனங்களின் பாகுபாட்டை நன்கறிவாய்

சத்குணம் கடைப்பிடிப்பாய் சகலகாமம் விட்டொழிப்பாய்
ஐம்புலன் அடக்கி அறிவால் ஆன்மாவை அறிவாய்
பற்றற்ற கர்மம் செய்வாய் பலன் எனக்கு அர்ப்பணிப்பாய்
ஆன்மசக்தி பெற்று அஞ்ஞானம்அழித்திடுவாய்

அத்தியாயம் 4 - ஞான யோகம்

எத்தனையோ பிறவி எடுத்துவிட்டோம் அறிவாய் நீ
அத்தனையும அறிவேன் நான் அன்பா அறியாய் நீ
அநீதி தலை தூக்கும் காலத்தில் பூவுலகில்
அவதரித்திருப்பேன் நீதி காக்க என்றறிவாய்

நல்லோரைக்காத்து நிற்கும் நண்பனாய் நான்
ஓரோர் யுகத்திலும் அவதரிப்பேன் பார்த்தா
பக்தரின் கற்பனைக்கொத்த உருவங்களில்
பல்வேறு காட்சிகளில் தெரிவேன் அன்பா

கர்மம் செய்பவனாய் தோன்றுவேன் எனினும் எனை
கர்மங்கள் ஒட்டாது என்றறிவாய் பார்த்தா
பற்றற்ற கர்மம் செய்பவன் யோகி
பற்று வைப்பவன் கர்மபல சுகமோகி

போகமோகம் நிலையற்றதறிவாய் அர்ஜுனா
யோகியாய் கர்மயோகம் கடைப்பிடித்திடுவாய்

அத்தியாயம் 5 - கர்ம சந்யாச யோகம்

கர்மம் செய்து கர்மபலன் துறப்பதேன்?
கர்மங்களைத் துறந்தால் என்ன? என்ற பார்த்தனிடம்
கர்மசந்யாச யோகம் போதித்தான் கண்ணன்
கர்மம் துறக்கவேண்டா கர்மயோகம் கடைப்பிடிப்பாய்

கர்மம் துறந்தவழி ஞானம் பெறுதலரிது
கர்மம் செய்தவழி யோகி ஆவதெளிது
புலன்களின் பலன்களில் பற்றற்று நின்றால்
பூலோகம் தேவலோகம் ஆகும் என்றறிவாய்

நான் எனதென்றஎண்ணம் அறவே ஒழித்து
நல்லபடி கர்மம் செய்தால் நீ யோகி ஆவாய்
ஞானிகளும் முனிவர்களும் ஏற்றவழி இதுவே
ஞானம் முழுமை பெற கர்மயோகமே நன்று

ஆன்மாவைக் கண்டறிவாய் ஆசையின்றி கர்மம் செய்வாய்
அரசனிலும் ஆண்டியிலும் ஒரே ஆன்மா என்றறிவாய்

அத்தியாயம் 6 - தியான யோகம்

கர்மங்கள் துறப்பது நன்றல்ல அறிவாய் நீ
கர்மபல மோகமின்றி கர்மம் செய்வாய் நீ
ஏகாந்த சிந்தையுடன் யோகம் பயில்வாய் நீ
அசையாத ஆசனத்தில் சுத்தமான ஓரிடத்தில்

முதுகுதலை கழுத்து இவை நேராக்கி இருப்பாய் நீ
சித்தம் சிதறாமல் நாசிநுனி நோக்கியே
சலனமின்றி இருந்து என்னில் மனதைச் செலுத்துவாய்
அளவிற்கு அதிகமாயின் அமுதமும் விடமாகும்

அளவில் குறையுமெனில் விடமும் மருந்தாகும்
ஆதலால் பார்த்தா நீ அளவோடு கர்மம் செய்வாய்
ஆசையைத் துறந்து ஆன்மாவில் நிலைகொள்வாய்
எல்லா உயிரினமும் நான் என்ற அறிவுடன் நீ

சொல்லாலும் செயலாலும் சமநோக்கு கொண்டிடுவாய்
அலைமோதும் மனமொரு குரங்காகும் என்றறிவாய்
அடக்கும் வழியாகும் யோகப்பயிற்சி என்றறிவாய்
இப்பிறவி யோகசித்தி கிட்டாது போனாலும்

இனிவரும் பிறவி உனை அவ்வழி நடத்திச் செல்லும்
முயற்சி திருவினை ஆக்கும் அறிவாய் பார்த்தா
மோகமற்ற யோகநிலை முழுமையான சித்தியாகும்
முழுதும் துறந்த யோகி முழுபோகி என்றறிவாய்

அத்தியாயம் 7 - விஞ்ஞான யோகம்

ஞானம் விஞ்ஞானம் இரண்டையும் அறிவாய் நீ
நீர் நிலம் நெருப்பு காற்று மனம் என்ற ஐந்தோடு
ஆகாயம் அகந்தை அறிவு சேர்ந்து எட்டாக
இயற்கையில் கலந்துள்ளேன் பூவுலகில் என்றறிவாய்

இவையினும் உயர்ந்த ஒன்றாம் உயிர்தன் வழியாக
உலகமதைத்தாங்கி நின்றேன் அன்பா அறிவாய் நீ
நூல் கோர்த்த சரம்போலெண் வகையுமாய்ப் பிணைந்து
இயங்கும் உலகமாம் விஞ்ஞானம் என்றறிவாய்

எண்வகை இயற்கையின் இயக்கம் நான் அறிவாய்
முக்குணச் சேர்க்கையாம் மாயையில் மயங்கும்
பூவுலகில் என்னை அறிபவர் மிக அரிது
என்னை அறிய முயற்சிப்போர் நான்குவிதம்

துன்புற்றோர் பொருள்விரும்பி என்றிவிருவர்
சுகதுக்க மோகவலை மாயையால் சூழ்ந்திடுவர்
தத்துவஞானம் விரும்பும் மூன்றாம் வகையினரோ
தன்னை எனக்கர்ப்பணித்து கர்மங்கள் செய்திடுவர்

ஞானிகளாம் நான்காமவர் என்னை நன்கு அறிபவராய்
நாளும் பிரியாமல் என்னுடனே லயித்திடுவர்

அத்தியாயம் 8 - அட்சர பிரம்ம யோகம்

அழிவில்லா பிரம்மத்தின் குணமே அத்யாத்மம்
மனிதன் முதலாய பிராணிகளே அதிபூதம்
காரணியாம் ஆன்மா அதிதைவம் என்றறிவாய்
இவைகளில் குடிகொள்ளும் அதியஜ்ஞன் நானாகும்

அணுவினும் அணுவாய் அறிவிற்கெட்டாததாய்
அஞ்ஞானம் கடந்த பழமையாம் பரம்பொருளை
அனுதினமும் தியானித்து ஒருநிலையில் நின்றாயேல்
அந்திம காலத்தில் அவனையே சென்றடைவாய்

பற்றற்று பிராணனை சிரசில் நிலைநிறுத்தி
பிரம்மமாம் ஓம் எனும் ஒற்றைச்சொல் உச்சரித்து
ஏகாந்த சிந்தையுடன் என்னை நினைத்திட்டால்
எளிதில் நான் அருகிலாவேன் என்றறிவாய் பார்த்தா

ஆயிரம் யுகம் என்ற பகல் ஒன்றில் தோன்றும் இவை
ஆயிரம் யுகம் என்ற இரவொன்றில் மறையுமிவை
அயனின் ஆயுள் இக்கணக்கில் வயது நூறு
அங்ஙனம் அனைத்தும் அழியும் என்றறிவாய்

அந்திமகாலம் தேய்பிறை இரவு மற்றும்
தட்சிணம் என்றாயின் யோகிக்கும் மறுபிறவி
உத்தராயணம் வளர்பிறை பகல் இவையில்
உயிர் நீத்த யோகி பிரம்மத்தை அடைந்திடுவான்
   
அத்தியாயம் 9 - ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்

இயற்கையால் உண்டாகும் ஐம்புலச் செயல்பாடு
அதனால் உண்டாகும் மனிதனும் பிராணிகளும்
இயக்கம் என்கையில் அறிவாய் அர்ஜுனா நீ
என்னில் எல்லாம் அடக்கம் என்றறிவாய்

வேதமும் வேள்வியும் வெயிலும் நானே
இருப்பிடம் காப்பிடம் என்றிவை நானே
உலகை இயக்கும் தந்தைதாய் நானே
பிறவாமை இறவாமை என்றிவை நானே

எல்லாதேவதையும் என்னில் அடக்கம் ஆகும்
என்னை அறிந்தவரின் தொண்டன் நானாகும்
இலை பூ பழம் நீர் என்றிவையில் ஒன்றையேனும்
ஒன்றிய பக்தியுமாய் எனக்கு தந்திட்டால்

உவகையுடன் ஏற்பேன் அறிவாய் அன்பா நீ
உன் செயலை எல்லாம் எனக்கு அர்ப்பணிப்பாய்
எல்லோரிடமும் சமநோக்கு கொண்டவன் நான்
என்னை அறிபவரில் எப்போதும் இருப்பவன் நான்
     
அத்தியாயம் 10 - விபூதி யோகம்

அர்ஜுனா அறிவாய் அனைத்திலும் நான் உள்ளேன்
ஆனாலும் என்னை அறிபவர் ஒருசிலரே
அஞ்ஞானம் அகன்ற ஞானிகளாம் அவர்
அனுதினமும் என்னை நினைவில் கொள்பவர்

முதலும் நடுவும் முடிவும் நானே
வேதத்தில் சாமமும் மாதத்தில் மார்கழியும்
ஆதித்யரில் விஷ்ணுவும் யக்ஞத்தில் ஜபயக்ஞம்
வ்ருஷ்ணிகுலத்தவரில் வாசுதேவன் நானே

முனிகளில் வியாசனும் கவிகளில் சுக்ரனும்
பாண்டவரில் நீயும் பறவையில் கருடனும்
விலங்கில் சிங்கமும் வித்தையில் ஆன்மமும்
அகார எழுத்தும் அனந்தனும் வருணனும்

பித்ருவில் அர்யமா தைத்யரில் பிரஹலாதன்
காலத்தில் வசந்தமும் காலனாம் யமனும்
காயத்ரி கங்கா காற்றும் காலமும்
செங்கோலும் நீதியும் சூதும் வெற்றியும்

பெண்ணினக்கீர்த்தியும் ரகசியத்தில் மௌனமும்
மீனில் மகரமும் ஞானியில் ஞானமும்
ஆயுதபாணியாம் ராமனும் நானே
அரசமரமும் அரசனும் நானே

வஜ்ராயுதமும் வாசுகியும் நானே
ஐராவதமும் உச்சைசிரவசும்
காமதேனுவும் மன்மதனும் நானே
நாரதன் சித்ரதன் கபிலமுனி

பிரகஸ்பதி ப்ருகுமுனி குபேரன் நான்
இந்திரன் சூரியன் சங்கரனும்
சுப்ரமணியனாம் சேனாபதியும்
அக்னி மேரு இமயமும் நான்

மரீசி சந்திரன் சமுத்திரம் நான்
ஒரெழுத்தாம் பிரணவமும் நான்
ஐம்புலன்களில் மனமே நான்
விவேகம் முயற்சி வெற்றியும் நான்

எல்லாப்பொருள்களின் மேன்மை நான்
எல்லோரையும் இயக்கும் ஆளுநன் நான்
உதவும் சிந்தையில் உயர்ந்த எண்ணத்தில்
நிதமும் நின்று ஒளிர்வேன் நான்

அத்தியாயம் 11 - விஸ்வரூப சந்தர்சன யோகம்

எல்லாம் என்னில் அடக்கம் என்ற கண்ணனை
அவ்வாறே காண விழைந்த பார்த்தன் முன்
ஆச்சர்யமிக்க ஐங்குணரூபம் கொண்டு
அர்ஜுனன் காணவே கண்ணன் நின்றான்

தெய்வீக கண்கள் பெற்றே அர்ஜுனன்
திவ்ய ரூபம் கண்டு மயங்கி நின்றான்
அண்டசராசரம் அனைத்தும் தாங்கியே
அர்ஜுனன் முன்னில் கண்ணன் ரூபம்

பன்முகம் பலகண்கள் ஆயுதம் பற்பல
பளீர் என்ற கோடி சூர்ய ஒளியுமாய்
வானுயர்ந்த சரீரம் கொண்டே கண்ணன்
பாண்டவகுமாரன் முன்னில் நின்றான்

விலங்கினம் முதல் விண்மீன் கூட்டம் வரை
விரிவாக கண்ணனில் கண்டான் பார்த்தன்
எரியும் நெருப்பை முகத்தில் கண்டான்
சந்திர சூரியர் கண்களாகக் கண்டான்

அனைத்து உயிர்களும் அவனது உடலில்
தத்தம் செயலுமாய் நடமாடிடவே
அளவில் பெரிதாகி நின்ற கண்ணனில்
அசுராதி தேவ முனிவர் கண்டான்

அர்ஜுனன் கண்டான் அங்கே தன் தேரை
அயர்ந்து இருக்கும் தன்னையும் தனக்கு
உபதேசம் செய்யும் அச்சுதனையும் கண்டான்
அற்புத ரூபமாய் கண்ணன் நிற்கக் கண்டான்

அக்னிப் பிழம்பாய் திகழும் ரூபமாய்
அனைத்துலகையும் தாங்கும் வண்ணமாய்
அளவிட முடியா அரிய உருவமாய்
அநேக முகமும் கோரைப்பற்களுமாய்

அனைத்து ஆயுதமும் கதையும் சக்ரமும்
அனைத்து தலைகளிலும் கிரீடம் சூடியும்
ஆதிஅந்தமில்லா அதீத அளவுமாய்
அனைவரும் பயக்கும் ரூபம் கண்டான்

கர்ணன் கௌரவர் துரோணர் பீஷ்மருடன்
கணக்கிலடங்காத இருபுற சேனைகளும்
அகன்ற வாய்களில் சென்று வீழ்வதை
அர்ஜுனன் கண்டு வியந்து நின்றான்

அச்சுதா கேசவா பொறுத்தருள்வாய்
அக்னியாய் எரிக்கும் ஆதிமூலமே
அளவிடமுடியா பிழை செய்தேனே
அன்பால் உனை நான் அடே என்றழைத்தேனே

கண்டேன் கௌரவர் கர்ணன் முதலாய
கணக்கிலா சேனைகள் உன்வாயில் வீழ்வதை
அறியேன் அதன் உண்மை அருள்புரிவாய் என்றான்
அச்சுதன் கூறினான் இவ்வாறு அவனிடம்

நீ கண்ட இவரழிவு நடப்பது நிச்சயம்
நீ வெறும் அம்பே உன்செயல் ஏதுமில்லை
துரோணர் முதலாய பெரியோர் அனைவரும்
மாண்டு போனவரே என்பதை அறிவாய்

அர்ஜுனன் அது கேட்டு அதிர்ந்து நின்றான்
அச்சுதா எனது அகங்காரம் பொறுப்பாய்
எல்லாமாய் எல்லாமும் அறிந்தவன் நீயே
எல்லாச்செயல்களின் காரணம் நீயே

நான்எனதென்ற மமதை கொண்டுன்னிடம்
நானாவிதமாய் நான் உரைத்தது பொறுப்பாய்
ஆதிமூலமே உன் திவ்யரூபம் கண்டேன்
அழகிய உனது இயல்புருவை விழைந்தேன்

சங்குசக்ரம் கதை கிரீடம் கொண்டே
சாந்த ரூபனாய் என்முன் நிற்பாய்
அனந்தசயனா என்றடி பணிந்துநின்றான்
தன்னியல்பெய்திய கண்ணன் பார்த்தனிடம்

அரிதாகும் காண்பதென் ஐங்குணரூபம்
அனன்யபக்தியால் அதெளிதாகும் என்றான்
         
அத்தியாயம் 12 - பக்தி யோகம்

மனமுழுதும் நானாக யோகத்தில் இருப்போர்
அழிவில்லா அருவமாம் அறுதியில்லா பிரம்மத்தை
எவர்க்கும் பொதுவாம் எங்கும் நிறை பரம்பொருளை
எல்லோரிடமும் சமநோக்கு கொண்டு

எல்லா உயிரின் நலன் கருதி தியானிப்போர்
என்னையே அடைவர் என்றறிவாய் அர்ஜுனா
வடிவில்லா பிரம்மத்தை தியானித்தல் பலர்க்கும்
கடினப்பயிற்சி என்றறிவாய் பார்த்தா நீ

என்றும் என்னையே நினைத்து வாழ்ந்திடுவாய்
அன்றேல் எல்லாமும் என்னிடம் சமர்ப்பிப்பாய்
அன்றேல் கர்மயோகம் கடைப்பிடித்து
உனதென்ற எண்ணமின்றி வாழும் நிலை கொள்வாய்

எதனாலும் உணர்வுகள் சிதறாமல் காப்பாய்
இன்பதுன்ப முதலான இரட்டைகளால் மனது
இடறிவிழாமல் பயிற்சி மேற்கொள்வாய்
உலகியல்நீதி வழிகளாம் என்னுரையை

உள்ளபடி கருத்தில் நீ கொண்டு நடந்தால்
உத்தமனாய் என்றும் எனக்குப் பிரியனாவாய்
     
அத்தியாயம் 13 - க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ்ய விபாக யோகம்

ஆலயம் ஆகும் இவ்வுடலில் மனம்நிறை
ஆண்டவன் நான் என்று அறிவாய் அர்ஜுனா
ஐம்புலன்களும் அதனைந்து செயல்பாடும்
அகங்காரம் முதலாய உணர்வுகள் கூடியதே

ஆலயம் என்ற இவ்வுடல் என்றறிவாய்
ஆலயச்செயல்பாட்டில் பற்றற்ற நிலை கொண்டு
ஆன்மாவைத் தேடி தனிமையில் தியானித்தல்
ஞானம் என்றறிவாய் அல்லவை அஞ்ஞானம்

எல்லாமாய் எல்லோரிலும் இயங்கும் பரம்பொருள்
எங்கும் நிறைந்தாலும் அருகிலில்லா ஒன்றாகும்
அறிதர்கரிதாம் இப்ப்ரம்மத்தை அறிவதே
ஞானமாகும் என்னை அடையும் வழியாகும்

ஆன்மாவும் இயற்கையும் அநாதி என்றறிவாய்
ஐம்புலக்குணங்களின் காரணி இயற்கையே
செயல்களின் இன்பதுன்ப காரணி ஆன்மாவாகும்
குணங்களில் பற்றாகும் பிறவியின் காரணி

இவ்விருவரை அறிந்தோன் உயர்ந்த ஞானி
எவ்வியிர்களிலும் என்னைக் காண்பான் ஞானி
இயற்கையே கர்மகாரணி என்றறிபவன்
ஆன்மாவை அதனின்று அகற்றிக் காண்பவன்

அணுவளவாம் அழிவில்லா பிரம்மத்தில் அடக்கமெல்லாம்
அனைத்து உயிர்களிலும் பரவிநிற்கும் பரம்பொருளாம்
அதுதான் ஆன்மா அதிலேதுவும் ஒட்டாதென்று
அறிந்தவன் ஞானி அறிவாய் அர்ஜுனா நீ
       
அத்தியாயம் 14 - குணத்ரய விபாக யோகம்

மகா இயற்கையாகும் எனது ஆலயத்தில்
உயிர்களின் காரணியாம் தந்தை நானே
உயிர்களின் உருவ காரணியே
அன்னையாம் இயற்கை அறிவாய் நீ

இயற்கையில் உண்டாகும் முக்குணங்கள்
சத்வம் ரஜஸ் தமஸ் என்றிவையாம்
நிர்மல ஒளிமயம் சத்வ குணம்
ஆன்மாவை ஞானத்தில் பிணைக்கும் அது

ஆசையும்பற்றும் ரஜோகுணம்
ஆன்மாவை காமத்தில் பிணைக்கும் அது
அஞ்ஞான காரணி தமோகுணம்
ஆன்மாவை சோம்பலில் பிணைக்கும் அது

முக்குணச்சேர்க்கை ஆகும் உயிர் இனம்
அவைவழி உயிரினம் செயல்படுமே
சத்வம் மேலிட்டால் தத்துவஞானம்
ரஜஸ் மேலிட்டால் பேராசையே

தமஸ் மேலிட்டால் அறிவிழந்த மயக்கம்
குணமேம்பாடே உயிர்களை வழிநடத்தும்
குணமேலிட்டால் பலன்கள் வேறுபடும்
இச்செயல்பாட்டை அறிந்தவன் அறிவாளி

கர்மபலன்களில் மயக்கம் இன்றியே
குணங்கள் கடந்து தான் வேறென்றறிந்து
எல்லோரிடமும் சமத்துவம் கொண்டங்கு
இன்பதுன்பங்களை சமமாக ஏற்று

மனச்சலனமின்றி என்னில் லயிப்பவன்
முக்குணம் கடந்த பரம்பொருளை அடைவான்

அத்தியாயம் 15 - புருஷோத்தம யோகம்

இயற்கையில் வாழ்க்கை ஓர் அற்புதமரமாகும்
மேலே வேருமாய் நிற்பவன் நான்முகனே
முக்குணங்கள் வளர்ந்த கிளைகளுமாய்
நான்மறைகள் அதன் இலைகளாக

ஐம்புலக்குணங்கள் தளிர்களாக
நிற்கும் இம்மரத்திற்கு ஆதி அந்தமில்லை
கர்மச்சேர்க்கையால் பூவுலகில் பார்த்தா
இம்மரத்தின் வேர்கள் பரவிடும் கீழேயும்

ஆசையும் மோகமும் விட்டொழித்து
ஆன்மகுணம் நன்கு கண்டறிந்து
ஆன்மஞானத்தில் ஈடுபட்டு
இந்தமரத்தின் மூலம் கண்டறிந்தந்த

ஆதிமூலத்தை சரணடைந்தால்
அதுவே எனதுயர்ந்த இடமாகும்
எனது ஒருகூறாம் ஆன்மாவே
எல்லா உயிர்களின் உயிரோட்டம்

உடலை அடையுங்கால் ஐம்புலனில்
உயிரினங்களை இழுத்துச் செல்லும்
உடலை விட்டங்கு போயாலோ
அவ்வைந்தையும் தன்னுடன் கொண்டு செல்லும்

அழிவில்லா இந்த ஆன்மாவை
அறிந்தவர் ஞானக்கண் படைத்தவரே
ஒளிப்பிழம்பாய் நிற்பவன் நான்
அன்னம் செரிக்க உதவும் நெருப்பும் நான்

உள்ளத்தில் குடிகொண்டிருப்பவன் நான்
ஞாபகம் ஞானம் வளர்ப்பவன் நான்
க்ஷர-அக்ஷரரில் உயர்ந்த ஆண்மகன் நான்
புருஷோத்தமனாம் பரமாத்மா நான்

அத்தியாயம் 16 - தெய்வ அசுர சம்பத் விபாகயோகம்

அன்பும் அஹிம்சையும் ஆன்மீக நாட்டமும்
மென்மையும் நேர்மையும் கருணையும் தியாகமும்
தூய்மையும் வாய்மையும் பொறுமையும் வீறும்
அடக்கமும் வெட்கமும் சலனமில்லாமையும்

தன்னிலை தவறாத புலனடக்கமும்
தெய்வீக ஒளியும் தெய்வக்குணங்களாகும்
காமம் கோபம கடுஞ்சொல் இவையோடு
ஆடம்பரம் அஞ்ஞானம் அடங்காமை

காமத்தால் உண்டாகும் இவ்வுலகம் பொய்யென்ற
வாதமும் அசுரகுணத்தன்மை என்றறிவாய்
அளவில்லா பேராசை மதிமயக்கம் கொண்டிவர்கள்
அதர்மவழிகளிலே பொருளீட்டி மகிழ்ந்திடுவர்

அகம்பாவம் கொண்டிவர் நான் என்ற போதை ஏறி
ஆடம்பரமாக யாகங்கள் செய்திடுவர்
தன்னை அல்லாமல் பிறரை நேசிக்கிலர்
தமோகுண மேலிட்டால் தரந்தாழ்ந்தவரிவர்

இவ்விரு குணங்களை செவ்வனே அறிவாய்
மறைநெறி அறிந்து கர்மம் கைக்கொள்வாய்

அத்தியாயம் 17 - குணத்ரய விபாக யோகம்

அர்ஜுனா அறிவாய் குணநிலை மூன்று வகை
சாத்வீகம் ராஜசம் தாமசம் ஆகுமிவை
சாத்வீகம் தேவகுணம் ராஜசம் யக்ஷகுணம்
தாமசம் பிரேதபூத குணமென்றறிவாய்

மனதில் பேராசையுடன் உடலை வருத்தி
மறைமுறை அற்றதவம் அசுரத்தன்மை
உணவும் தானமும் யாகமும் மூன்றுவகை
சுகமுள்ள குணமேன்மை உள்ளஉணவு சத்வம்

காரம் கசப்பு சூடு புளிப்பு இவை ராஜசம்
உலர்ந்ததும் பழையதும்  ஆனவை தாமசம்
ஒன்றிய மனதுமாய் பலனில் பற்றின்றி
செய்யும் யாகம் சாத்வீகமாகும்

பலனை வேண்டி அதீத ஆடம்பரமாய்
பலர் முன்னில் செய்வது ராஜசம் ஆகும்
வேதநெறி தவறியது தானங்கள் அற்றது
மந்திரம் காணிக்கை அற்ற யாகம் தாமசம்

பெரியோரை வந்தித்தல் தூய்மை நேர்மை பாலித்தல்
அஹிம்சை என்றிவை உடலின் தவம் ஆகும்
உண்மையும் இன்பமும் நன்மையும் கலந்த உரை
பிறரை வருத்தாத நல்வாக்கு என்றிவை

வாக்கினால் செய்யும் தவம் ஆகும் அறிவாய்
மனத்தெளிவு கட்டுப்பாடு மௌனம் மனத்தவம்
பரம்பொருளை முன்னிட்டு பலனை ஆராயாமல்
கவனமாய் செய்யும் தவம் சாத்வீகமாகும்

பலனைக்கருதி செய்வது ராஜசமே
மூர்க்கனாய் தன்னை வருத்துதல் தாமசம்
இடம் பொருள் ஏவல் இவை அறிந்து செய்யும்
எதிர்பார்ப்பற்ற தானம் சாத்வீகமாகும்

எதிர்பார்ப்புடனான தானம் ராஜசம்
இகழ்ச்சி அலட்சியம் சேர்ந்தது தாமசம்
பிரம்மத்தின் பெயர்களாகும் ஓம் சத் தத் இவை
எல்லா நற்கர்மத்திலும் கூறப்படும் அறிவாய்

அத்தியாயம் 18 - மோட்ச சந்யாச யோகம்

கர்மம் செய்திடினும் பலன் துறத்தல் தியாகம்
பலன் வேண்டி செய்யும் கர்மம் துறத்தல் துறவு
இன்றியமையாதவை வேள்வி தானம் தவம இவை
தியாக நோக்குடன் செய்ய வேண்டியவை

விதித்த கர்மம் துறப்பது தாமசம்
துன்பம் கருதி துறப்பது ராஜசம்
பற்றுதல் இன்றி விதித்த கர்மம்
பலனைத் துறந்து செய்வது சாத்வீகம்

நல்லவை அல்லவையாய கர்மம் முறையே
நாடலும் வெறுக்கலும் சாத்வீக குணமல்ல
முக்குணமும் கர்மமும் மனிதனில் உள்ளவை
இயற்கையாகவே நியமிக்கப்பட்டவை

மனிதனவன் சரீரம் ஐம்புலங்களுடன்
சுவாசம் பரமாத்மா என்ற இவ்வைந்தும்
மனிதனின் கர்மகாரணிகள் அதனால்
அகங்காரம் ஆகும் நான்செய்தேன் எனும் எண்ணம்

அறிவு அறிபவன் அறிபடும் பொருளிவை
கர்மகாரணிகள் ஆகும் நண்பா
செய்வழி செய்பவன் செயல் இம்மூன்றும்
கர்மம் நிறைவேற காரணிகள் ஆகும்

அனைத்து உயிர்கட்கும் ஒரே ஆன்மா என்பதும்
ஓரோர் உயிர்க்கும் ஆன்மா வேறென்பதும்
ஞானங்களாம் முறையே சத்வம் ராஜசமாம்
உண்மை அல்லாததில் ஓட்டுவது தாமசம்

கவனம் சிதறாத பற்றற்ற கர்மவினை
பற்றும் அகங்காரமும் கொண்ட கர்மவினை
மோகமேலிட்டு சக்திமீறிச செய்யும் கர்மம்
முறையே சத்வம் ராஜசம் தாமசமாம்

கர்மம் செய்பவனும் இம்மூவகை ஆகும்
நன்நெறியைக் கசடற கற்றல் சாத்வீகம்
முழுமை பெறாத இவ்வறிவு ராஜசம்
அதர்மமே தர்மம் என்றறிவு தாமசம்

மனம் புலன் அடக்கும் யோகம் சாத்வீகம்
பலன்கோரி புலன்வழி செல்லல் ராஜசம்
அதிமோகம் கொண்ட கர்வவினை தாமசம்
சாத்வீக சுகமது அந்திம சுகம் தரும்

ராஜச சுகமோ ஆதியில் சுகம் தரும்
உறக்கம் சோம்பலென்ற மயக்கம் தாமசம்
ஆன்மீகவழியும் அடக்கமும் நேர்மையும்
அந்தண குலத்தின் இயற்கை குணங்கள்

வீறும் பிரதாபமும் தானமும் ஆளுமையும்
அரசகுலத்தோரின் இயற்கை குணங்கள்
பசுக்களை மேய்த்தல் வாணிபம் விவசாயம்
என்றிவை வைசியரின் இயற்கை குணங்கள்

சேவனம் புரிந்து வாழ்வதென்பது
சூத்திரனின் இயற்கை குணமென அறிவாய்
குலதர்மம் காப்பவனே சிறந்தவன் ஆவான்
அவனில் ஆன்மாவை கடமையால் வந்திக்கிறான்

குலதர்மவழி துறத்தல் நன்மாக்கமல்ல
அரைகுறை ஆயினும் குலதர்மம் காத்தல் நன்று
எல்லாகுல தர்மங்களும் நன்மைதீமை உடையனவே
இயற்கையான இக்கர்மம் விடாமல் தொடர்வதே மேல்

அளவோடு உண்டும் அகங்காரம் விட்டொழித்தும்
அடக்கிய புலன்களுமாய் தனிமையில் தியானம் செய்து
அனைத்து உயிர்களிலும் சமநோக்கு கொண்டு
அபிமானம் அற்றவன் உள்ளம் என்னை நன்கறியும்

உன்பிறவிக்குணம் உன்னைவிட்டு ஒழியாது
உள்ளபடி குலதர்மமாம் போர் செய்வாய்
எனக்கே சமர்ப்பிப்பாய் கர்மம் கர்மபலன்
நன்கு ஆராய்ந்து நல்லதோர் முடிவெடுப்பாய்

என்ற உபதேசம் கேட்ட பார்த்தனும்
நன்றியுடன் வணங்கினான் நந்தகுமாரனை
அச்சுதா உணர்ந்தேன் அகங்காரம் ஒழிந்தேன்
அனைத்தும் உன்னில் சமர்ப்பணம் செய்தேன்

தெளிந்தேன் என்றே காண்டீபம் எடுத்தான்
தேவதேவனாம் கண்ணனைப் பணிந்தே
பரம்பொருளை ஒன்றிய பற்றற்ற கர்மயோகம்
ஞானமார்க்கமாகும் பக்தியோகம் என்றிவையை

பார்த்தன் அறிய உரைத்தனன் கண்ணன்
கவனமாய் படிப்பவன் கேட்பவன் நலம் பெறுவான்
அரியின் நினைவே அரியதவம் இது உண்மை
அறிந்து அர்ப்பித்தால் அடைந்திடுவர் முக்திநிலை

சமர்ப்பணம்

உன் திருவாய்மொழியாம் கீதையை கண்ணா
உன்னடி பணிந்தே சமர்ப்பணம் செய்தேன்
கண்ணா பொறுப்பாய் காப்பாய் அருள்வாய்
கணக்கிலா தவறுகள் செய்யும் இந்த ஏழையை

உலகில் எவரிலும் உள்ளவன் ஒருவனே
உயிர் என்ற பெயரில் ஆள்பவன் அவனே
உதவும் சிந்தையும் உயர்ந்த எண்ணமும்
உள்ளோர் உணர்வில் ஒளிர்பவன் அவனே

அங்கெங்கெனாதபடி எங்கும் நிறை காற்றென
அனைத்து உயிர்களிலும் நிறைகின்ற பரம்பொருளை
அறிந்து அனைவரிலும் ஒருமை காண்பவன்
ஆதவனேபோல் ஒளிர்ந்து நிற்பான்


சுபம்!    

All rights reserved for the poem. Leela Narayanaswamy©