Saturday, October 6, 2012

24.இயற்கை வளம் காப்போம் -வான்நிலம் நெருப்பு




வான்நிலம் நெருப்பு காற்று நீரென்ற ஐந்துமாய்
காக்கிறாள் இயற்கை அன்னை  நன்றி என்றுமே

மரம தரும் மழையால் நன்மையே
மகன் போல காப்போம் நண்பனே

ஆலைகள் உமிழும் அமில வாயுவால் காற்றிலே
ஆவினம் பறவை மக்கள் சுவாசமே தேடுதே

வானில் புரட்சி செய்தால் பூமியே
ஊனமுற்று போகும் உண்மையே

vaannilam neruppu katRu neerendra aynthumaay
kaakiRaaL iyaRkai annai nandRi endRume

maram tharum mazhaiyaal nanmaiye
makanpola kaappom nanpane

aalaikaL umizhum amila vaayuvaal kaatRile
aavinam paRavai makkaL swaasame theduthe

vaanil puratchi cheythaal boomiye
oonamutru pokum uNmaiye

വാന്നിലം നെരുപ്പു കാറ്റു നീരെന്‍ട്ര ഐന്തുമായ്‌
കാകിറാള്‍ ഇയര്‍കൈ അന്നൈ നന്ട്രി  എന്ട്രുമേ

മരം തരും മഴൈയാല്‍ നന്മൈയേ
മകന്‍ പോല കാപ്പോം നണ്‍പനേ

ആലൈകള്‍ ഉമിഴും അമില വായുവാല്‍ കാറ്റിലേ
ആവിനം പറവൈ മക്കള്‍ സ്വാസമേ തേടതേ

വാനില്‍ പുരഷി ചെയ്‌താല്‍ ഭൂമിയേ
ഊനമുട്രു പോകും ഉണ്മൈയേ
(written as per the tune already set)
written according to the tune set. sung byMr.Unnikrishnan.K.B.

All rights reserved for the poem. Leela Narayanaswamy©


Monday, September 10, 2012

ஸ்ரீமத் பகவத் கீதை (சுருக்கமாக)

காப்பு

ஆதிமுதல்வனே அருள்மிகு விநாயகா
வேழமுகத்தோனே வேங்கடன் மருகனே
வினை தீர்க்கும் வித்தகனே வேண்டினேன் உன்னையப்பா
இடையூறு களைந்துதவ இங்கே எழுந்தருள்வாய்

வேறு

வேதசாரமாம் கீதைதனை இங்கு
கீதமாய் நாம் கூடி பாடிடுவோம்
சோதனை வேதனை நிறைந்த வாழ்விலே
சோர்விலா இன்பம் அடைந்திடுவோம்

அத்தியாயம் 1

அரசகுலத்தோராம் பாண்டவர் கௌரவர்
அரியணைக்காக வேறாகி நின்றனர்
பாண்டவர் தூதனாய் சென்றான் கண்ணன்
பரிந்துரைத்து போரை ஒழிவாக்க நினைத்தான்

ஆணவம் ஆத்திரம் கண்ணை மறைத்திட
அற்பர் கௌரவர் முதிர்ந்தனர் போரிட
பார்த்தனுக்காக தேரோட்டினான் கண்ணன்
கௌரவர் நின்றனர் பீஷ்மர் தலைமையில்

எதிரிகளாய் நின்ற உறவுகளைக் கண்டே
பதறினான் பார்த்தன் கதறினான் கண்ணனிடம்
பாபச்செயல் இது உறவோடு பகை வேண்டா
கோபம் குரோதம் கொண்டு போரிட வேண்டா

ஆசிரியர் துரோணர் பெரியவர் பீஷ்மர் இவர்
கேசவா தவறிது போரிட வேண்டா என்றான்
அரசபோக ஆசை வைத்து அற்பனானேன்
அழிவது என்குலம் என்ற அறிவிழந்தேன்

கலங்கிய கண்களுடன் காண்டீபம் கீழே வைத்தான்
குலநாசம் செய்தோர் வாழ்வு வேண்டாமென்றே
குழப்பமும் இரக்கமும் ஒருசேர நின்றான் பார்த்தன்
இழப்பில் இன்பமுண்டோ சொல்வாய் கண்ணா என்றான்

அத்தியாயம் 2 - சாங்க்ய யோகம்

நிலைகுலைந்து தேரில் இருந்துவிட்ட பார்த்த்னிடம்
நிலையாமை இறவாமை எவை என அறிகிலையோ
நிதானம் கொள்வாய் எனக்கண்ணன் கூறினான்
அழிவது உடலாகும் அழிவில்லை ஆன்மாவிற்கு

போற்றிவளர்த்த உடல் அழியும் என்ற உண்மை
மாற்றமுடியாததை மனிதனால் அறிவாய்
அரசகுல தர்மமாகும் போரிடல் என்றறிவாய்
அடையும் வெற்றிதோல்வி சமமாக ஏற்றிடுவாய்

குலதர்மம் செய்யாமல் குழம்பி நின்றால் உன்னை
உலகம் பழிக்கும் அது தீராத நரகம் ஆகும்
எது தேவை என்றறிவாய் வேதங்களை நன்கறிவாய்
எதிலும் பற்றற்று குலதர்மம் காத்து நிற்பாய்

மனிதனின் நிலைகொள்ளா மனம் அவன் எதிரியாகும்
நினைப்பதில் ஆசைகொண்டு அதனால் மோகம் கொண்டு
தனைமறந்து தடுமாறி பகுத்தறிவு இழந்து விடும்
ஐம்புலன்கள் மனதை தன்வசம் ஆக்கிவிடும்

ஐம்புலனின் செயலாகும் இன்பதுன்பமென்றறிவாய்
ஐயமின்றி அறிவாய் நிலையற்றதாகும் இவை
இன்பதுன்பங்களில் சமநோக்கு பாவித்து
ஆசைபயம் கோபம் இவை இல்லா முனியாம்

ஸ்திதப்ரஜ்ஞனாக நீ கர்மம் செய்திடுவாய்
இதுவே பிரம்மஞான நிலை முக்தி தரும் உச்ச நிலை

அத்தியாயம் 3 - கர்ம யோகம்

கர்மமின்றி மனிதனில்லை அறிவாய் அர்ஜுனா
கர்மபல மோகமின்றி கர்மம் செய்திடுவாய்
அன்னம் முதல் வேதம் வரை ஆராய்ந்தாலோ
அழிவற்ற பிரம்மத்தில் வேதம் நிலை கொண்டிடுமே

அரசன் எவ்வழியோ அவ்வழி மக்கள் என்பார்
ஆதலால் அர்ஜுனா கர்மம் செய்ய தயங்காதே
முக்குணங்கள் கர்மத்தின் காரணிகள் என்றறிவாய்
கர்மகுனங்களின் பாகுபாட்டை நன்கறிவாய்

சத்குணம் கடைப்பிடிப்பாய் சகலகாமம் விட்டொழிப்பாய்
ஐம்புலன் அடக்கி அறிவால் ஆன்மாவை அறிவாய்
பற்றற்ற கர்மம் செய்வாய் பலன் எனக்கு அர்ப்பணிப்பாய்
ஆன்மசக்தி பெற்று அஞ்ஞானம்அழித்திடுவாய்

அத்தியாயம் 4 - ஞான யோகம்

எத்தனையோ பிறவி எடுத்துவிட்டோம் அறிவாய் நீ
அத்தனையும அறிவேன் நான் அன்பா அறியாய் நீ
அநீதி தலை தூக்கும் காலத்தில் பூவுலகில்
அவதரித்திருப்பேன் நீதி காக்க என்றறிவாய்

நல்லோரைக்காத்து நிற்கும் நண்பனாய் நான்
ஓரோர் யுகத்திலும் அவதரிப்பேன் பார்த்தா
பக்தரின் கற்பனைக்கொத்த உருவங்களில்
பல்வேறு காட்சிகளில் தெரிவேன் அன்பா

கர்மம் செய்பவனாய் தோன்றுவேன் எனினும் எனை
கர்மங்கள் ஒட்டாது என்றறிவாய் பார்த்தா
பற்றற்ற கர்மம் செய்பவன் யோகி
பற்று வைப்பவன் கர்மபல சுகமோகி

போகமோகம் நிலையற்றதறிவாய் அர்ஜுனா
யோகியாய் கர்மயோகம் கடைப்பிடித்திடுவாய்

அத்தியாயம் 5 - கர்ம சந்யாச யோகம்

கர்மம் செய்து கர்மபலன் துறப்பதேன்?
கர்மங்களைத் துறந்தால் என்ன? என்ற பார்த்தனிடம்
கர்மசந்யாச யோகம் போதித்தான் கண்ணன்
கர்மம் துறக்கவேண்டா கர்மயோகம் கடைப்பிடிப்பாய்

கர்மம் துறந்தவழி ஞானம் பெறுதலரிது
கர்மம் செய்தவழி யோகி ஆவதெளிது
புலன்களின் பலன்களில் பற்றற்று நின்றால்
பூலோகம் தேவலோகம் ஆகும் என்றறிவாய்

நான் எனதென்றஎண்ணம் அறவே ஒழித்து
நல்லபடி கர்மம் செய்தால் நீ யோகி ஆவாய்
ஞானிகளும் முனிவர்களும் ஏற்றவழி இதுவே
ஞானம் முழுமை பெற கர்மயோகமே நன்று

ஆன்மாவைக் கண்டறிவாய் ஆசையின்றி கர்மம் செய்வாய்
அரசனிலும் ஆண்டியிலும் ஒரே ஆன்மா என்றறிவாய்

அத்தியாயம் 6 - தியான யோகம்

கர்மங்கள் துறப்பது நன்றல்ல அறிவாய் நீ
கர்மபல மோகமின்றி கர்மம் செய்வாய் நீ
ஏகாந்த சிந்தையுடன் யோகம் பயில்வாய் நீ
அசையாத ஆசனத்தில் சுத்தமான ஓரிடத்தில்

முதுகுதலை கழுத்து இவை நேராக்கி இருப்பாய் நீ
சித்தம் சிதறாமல் நாசிநுனி நோக்கியே
சலனமின்றி இருந்து என்னில் மனதைச் செலுத்துவாய்
அளவிற்கு அதிகமாயின் அமுதமும் விடமாகும்

அளவில் குறையுமெனில் விடமும் மருந்தாகும்
ஆதலால் பார்த்தா நீ அளவோடு கர்மம் செய்வாய்
ஆசையைத் துறந்து ஆன்மாவில் நிலைகொள்வாய்
எல்லா உயிரினமும் நான் என்ற அறிவுடன் நீ

சொல்லாலும் செயலாலும் சமநோக்கு கொண்டிடுவாய்
அலைமோதும் மனமொரு குரங்காகும் என்றறிவாய்
அடக்கும் வழியாகும் யோகப்பயிற்சி என்றறிவாய்
இப்பிறவி யோகசித்தி கிட்டாது போனாலும்

இனிவரும் பிறவி உனை அவ்வழி நடத்திச் செல்லும்
முயற்சி திருவினை ஆக்கும் அறிவாய் பார்த்தா
மோகமற்ற யோகநிலை முழுமையான சித்தியாகும்
முழுதும் துறந்த யோகி முழுபோகி என்றறிவாய்

அத்தியாயம் 7 - விஞ்ஞான யோகம்

ஞானம் விஞ்ஞானம் இரண்டையும் அறிவாய் நீ
நீர் நிலம் நெருப்பு காற்று மனம் என்ற ஐந்தோடு
ஆகாயம் அகந்தை அறிவு சேர்ந்து எட்டாக
இயற்கையில் கலந்துள்ளேன் பூவுலகில் என்றறிவாய்

இவையினும் உயர்ந்த ஒன்றாம் உயிர்தன் வழியாக
உலகமதைத்தாங்கி நின்றேன் அன்பா அறிவாய் நீ
நூல் கோர்த்த சரம்போலெண் வகையுமாய்ப் பிணைந்து
இயங்கும் உலகமாம் விஞ்ஞானம் என்றறிவாய்

எண்வகை இயற்கையின் இயக்கம் நான் அறிவாய்
முக்குணச் சேர்க்கையாம் மாயையில் மயங்கும்
பூவுலகில் என்னை அறிபவர் மிக அரிது
என்னை அறிய முயற்சிப்போர் நான்குவிதம்

துன்புற்றோர் பொருள்விரும்பி என்றிவிருவர்
சுகதுக்க மோகவலை மாயையால் சூழ்ந்திடுவர்
தத்துவஞானம் விரும்பும் மூன்றாம் வகையினரோ
தன்னை எனக்கர்ப்பணித்து கர்மங்கள் செய்திடுவர்

ஞானிகளாம் நான்காமவர் என்னை நன்கு அறிபவராய்
நாளும் பிரியாமல் என்னுடனே லயித்திடுவர்

அத்தியாயம் 8 - அட்சர பிரம்ம யோகம்

அழிவில்லா பிரம்மத்தின் குணமே அத்யாத்மம்
மனிதன் முதலாய பிராணிகளே அதிபூதம்
காரணியாம் ஆன்மா அதிதைவம் என்றறிவாய்
இவைகளில் குடிகொள்ளும் அதியஜ்ஞன் நானாகும்

அணுவினும் அணுவாய் அறிவிற்கெட்டாததாய்
அஞ்ஞானம் கடந்த பழமையாம் பரம்பொருளை
அனுதினமும் தியானித்து ஒருநிலையில் நின்றாயேல்
அந்திம காலத்தில் அவனையே சென்றடைவாய்

பற்றற்று பிராணனை சிரசில் நிலைநிறுத்தி
பிரம்மமாம் ஓம் எனும் ஒற்றைச்சொல் உச்சரித்து
ஏகாந்த சிந்தையுடன் என்னை நினைத்திட்டால்
எளிதில் நான் அருகிலாவேன் என்றறிவாய் பார்த்தா

ஆயிரம் யுகம் என்ற பகல் ஒன்றில் தோன்றும் இவை
ஆயிரம் யுகம் என்ற இரவொன்றில் மறையுமிவை
அயனின் ஆயுள் இக்கணக்கில் வயது நூறு
அங்ஙனம் அனைத்தும் அழியும் என்றறிவாய்

அந்திமகாலம் தேய்பிறை இரவு மற்றும்
தட்சிணம் என்றாயின் யோகிக்கும் மறுபிறவி
உத்தராயணம் வளர்பிறை பகல் இவையில்
உயிர் நீத்த யோகி பிரம்மத்தை அடைந்திடுவான்
   
அத்தியாயம் 9 - ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்

இயற்கையால் உண்டாகும் ஐம்புலச் செயல்பாடு
அதனால் உண்டாகும் மனிதனும் பிராணிகளும்
இயக்கம் என்கையில் அறிவாய் அர்ஜுனா நீ
என்னில் எல்லாம் அடக்கம் என்றறிவாய்

வேதமும் வேள்வியும் வெயிலும் நானே
இருப்பிடம் காப்பிடம் என்றிவை நானே
உலகை இயக்கும் தந்தைதாய் நானே
பிறவாமை இறவாமை என்றிவை நானே

எல்லாதேவதையும் என்னில் அடக்கம் ஆகும்
என்னை அறிந்தவரின் தொண்டன் நானாகும்
இலை பூ பழம் நீர் என்றிவையில் ஒன்றையேனும்
ஒன்றிய பக்தியுமாய் எனக்கு தந்திட்டால்

உவகையுடன் ஏற்பேன் அறிவாய் அன்பா நீ
உன் செயலை எல்லாம் எனக்கு அர்ப்பணிப்பாய்
எல்லோரிடமும் சமநோக்கு கொண்டவன் நான்
என்னை அறிபவரில் எப்போதும் இருப்பவன் நான்
     
அத்தியாயம் 10 - விபூதி யோகம்

அர்ஜுனா அறிவாய் அனைத்திலும் நான் உள்ளேன்
ஆனாலும் என்னை அறிபவர் ஒருசிலரே
அஞ்ஞானம் அகன்ற ஞானிகளாம் அவர்
அனுதினமும் என்னை நினைவில் கொள்பவர்

முதலும் நடுவும் முடிவும் நானே
வேதத்தில் சாமமும் மாதத்தில் மார்கழியும்
ஆதித்யரில் விஷ்ணுவும் யக்ஞத்தில் ஜபயக்ஞம்
வ்ருஷ்ணிகுலத்தவரில் வாசுதேவன் நானே

முனிகளில் வியாசனும் கவிகளில் சுக்ரனும்
பாண்டவரில் நீயும் பறவையில் கருடனும்
விலங்கில் சிங்கமும் வித்தையில் ஆன்மமும்
அகார எழுத்தும் அனந்தனும் வருணனும்

பித்ருவில் அர்யமா தைத்யரில் பிரஹலாதன்
காலத்தில் வசந்தமும் காலனாம் யமனும்
காயத்ரி கங்கா காற்றும் காலமும்
செங்கோலும் நீதியும் சூதும் வெற்றியும்

பெண்ணினக்கீர்த்தியும் ரகசியத்தில் மௌனமும்
மீனில் மகரமும் ஞானியில் ஞானமும்
ஆயுதபாணியாம் ராமனும் நானே
அரசமரமும் அரசனும் நானே

வஜ்ராயுதமும் வாசுகியும் நானே
ஐராவதமும் உச்சைசிரவசும்
காமதேனுவும் மன்மதனும் நானே
நாரதன் சித்ரதன் கபிலமுனி

பிரகஸ்பதி ப்ருகுமுனி குபேரன் நான்
இந்திரன் சூரியன் சங்கரனும்
சுப்ரமணியனாம் சேனாபதியும்
அக்னி மேரு இமயமும் நான்

மரீசி சந்திரன் சமுத்திரம் நான்
ஒரெழுத்தாம் பிரணவமும் நான்
ஐம்புலன்களில் மனமே நான்
விவேகம் முயற்சி வெற்றியும் நான்

எல்லாப்பொருள்களின் மேன்மை நான்
எல்லோரையும் இயக்கும் ஆளுநன் நான்
உதவும் சிந்தையில் உயர்ந்த எண்ணத்தில்
நிதமும் நின்று ஒளிர்வேன் நான்

அத்தியாயம் 11 - விஸ்வரூப சந்தர்சன யோகம்

எல்லாம் என்னில் அடக்கம் என்ற கண்ணனை
அவ்வாறே காண விழைந்த பார்த்தன் முன்
ஆச்சர்யமிக்க ஐங்குணரூபம் கொண்டு
அர்ஜுனன் காணவே கண்ணன் நின்றான்

தெய்வீக கண்கள் பெற்றே அர்ஜுனன்
திவ்ய ரூபம் கண்டு மயங்கி நின்றான்
அண்டசராசரம் அனைத்தும் தாங்கியே
அர்ஜுனன் முன்னில் கண்ணன் ரூபம்

பன்முகம் பலகண்கள் ஆயுதம் பற்பல
பளீர் என்ற கோடி சூர்ய ஒளியுமாய்
வானுயர்ந்த சரீரம் கொண்டே கண்ணன்
பாண்டவகுமாரன் முன்னில் நின்றான்

விலங்கினம் முதல் விண்மீன் கூட்டம் வரை
விரிவாக கண்ணனில் கண்டான் பார்த்தன்
எரியும் நெருப்பை முகத்தில் கண்டான்
சந்திர சூரியர் கண்களாகக் கண்டான்

அனைத்து உயிர்களும் அவனது உடலில்
தத்தம் செயலுமாய் நடமாடிடவே
அளவில் பெரிதாகி நின்ற கண்ணனில்
அசுராதி தேவ முனிவர் கண்டான்

அர்ஜுனன் கண்டான் அங்கே தன் தேரை
அயர்ந்து இருக்கும் தன்னையும் தனக்கு
உபதேசம் செய்யும் அச்சுதனையும் கண்டான்
அற்புத ரூபமாய் கண்ணன் நிற்கக் கண்டான்

அக்னிப் பிழம்பாய் திகழும் ரூபமாய்
அனைத்துலகையும் தாங்கும் வண்ணமாய்
அளவிட முடியா அரிய உருவமாய்
அநேக முகமும் கோரைப்பற்களுமாய்

அனைத்து ஆயுதமும் கதையும் சக்ரமும்
அனைத்து தலைகளிலும் கிரீடம் சூடியும்
ஆதிஅந்தமில்லா அதீத அளவுமாய்
அனைவரும் பயக்கும் ரூபம் கண்டான்

கர்ணன் கௌரவர் துரோணர் பீஷ்மருடன்
கணக்கிலடங்காத இருபுற சேனைகளும்
அகன்ற வாய்களில் சென்று வீழ்வதை
அர்ஜுனன் கண்டு வியந்து நின்றான்

அச்சுதா கேசவா பொறுத்தருள்வாய்
அக்னியாய் எரிக்கும் ஆதிமூலமே
அளவிடமுடியா பிழை செய்தேனே
அன்பால் உனை நான் அடே என்றழைத்தேனே

கண்டேன் கௌரவர் கர்ணன் முதலாய
கணக்கிலா சேனைகள் உன்வாயில் வீழ்வதை
அறியேன் அதன் உண்மை அருள்புரிவாய் என்றான்
அச்சுதன் கூறினான் இவ்வாறு அவனிடம்

நீ கண்ட இவரழிவு நடப்பது நிச்சயம்
நீ வெறும் அம்பே உன்செயல் ஏதுமில்லை
துரோணர் முதலாய பெரியோர் அனைவரும்
மாண்டு போனவரே என்பதை அறிவாய்

அர்ஜுனன் அது கேட்டு அதிர்ந்து நின்றான்
அச்சுதா எனது அகங்காரம் பொறுப்பாய்
எல்லாமாய் எல்லாமும் அறிந்தவன் நீயே
எல்லாச்செயல்களின் காரணம் நீயே

நான்எனதென்ற மமதை கொண்டுன்னிடம்
நானாவிதமாய் நான் உரைத்தது பொறுப்பாய்
ஆதிமூலமே உன் திவ்யரூபம் கண்டேன்
அழகிய உனது இயல்புருவை விழைந்தேன்

சங்குசக்ரம் கதை கிரீடம் கொண்டே
சாந்த ரூபனாய் என்முன் நிற்பாய்
அனந்தசயனா என்றடி பணிந்துநின்றான்
தன்னியல்பெய்திய கண்ணன் பார்த்தனிடம்

அரிதாகும் காண்பதென் ஐங்குணரூபம்
அனன்யபக்தியால் அதெளிதாகும் என்றான்
         
அத்தியாயம் 12 - பக்தி யோகம்

மனமுழுதும் நானாக யோகத்தில் இருப்போர்
அழிவில்லா அருவமாம் அறுதியில்லா பிரம்மத்தை
எவர்க்கும் பொதுவாம் எங்கும் நிறை பரம்பொருளை
எல்லோரிடமும் சமநோக்கு கொண்டு

எல்லா உயிரின் நலன் கருதி தியானிப்போர்
என்னையே அடைவர் என்றறிவாய் அர்ஜுனா
வடிவில்லா பிரம்மத்தை தியானித்தல் பலர்க்கும்
கடினப்பயிற்சி என்றறிவாய் பார்த்தா நீ

என்றும் என்னையே நினைத்து வாழ்ந்திடுவாய்
அன்றேல் எல்லாமும் என்னிடம் சமர்ப்பிப்பாய்
அன்றேல் கர்மயோகம் கடைப்பிடித்து
உனதென்ற எண்ணமின்றி வாழும் நிலை கொள்வாய்

எதனாலும் உணர்வுகள் சிதறாமல் காப்பாய்
இன்பதுன்ப முதலான இரட்டைகளால் மனது
இடறிவிழாமல் பயிற்சி மேற்கொள்வாய்
உலகியல்நீதி வழிகளாம் என்னுரையை

உள்ளபடி கருத்தில் நீ கொண்டு நடந்தால்
உத்தமனாய் என்றும் எனக்குப் பிரியனாவாய்
     
அத்தியாயம் 13 - க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ்ய விபாக யோகம்

ஆலயம் ஆகும் இவ்வுடலில் மனம்நிறை
ஆண்டவன் நான் என்று அறிவாய் அர்ஜுனா
ஐம்புலன்களும் அதனைந்து செயல்பாடும்
அகங்காரம் முதலாய உணர்வுகள் கூடியதே

ஆலயம் என்ற இவ்வுடல் என்றறிவாய்
ஆலயச்செயல்பாட்டில் பற்றற்ற நிலை கொண்டு
ஆன்மாவைத் தேடி தனிமையில் தியானித்தல்
ஞானம் என்றறிவாய் அல்லவை அஞ்ஞானம்

எல்லாமாய் எல்லோரிலும் இயங்கும் பரம்பொருள்
எங்கும் நிறைந்தாலும் அருகிலில்லா ஒன்றாகும்
அறிதர்கரிதாம் இப்ப்ரம்மத்தை அறிவதே
ஞானமாகும் என்னை அடையும் வழியாகும்

ஆன்மாவும் இயற்கையும் அநாதி என்றறிவாய்
ஐம்புலக்குணங்களின் காரணி இயற்கையே
செயல்களின் இன்பதுன்ப காரணி ஆன்மாவாகும்
குணங்களில் பற்றாகும் பிறவியின் காரணி

இவ்விருவரை அறிந்தோன் உயர்ந்த ஞானி
எவ்வியிர்களிலும் என்னைக் காண்பான் ஞானி
இயற்கையே கர்மகாரணி என்றறிபவன்
ஆன்மாவை அதனின்று அகற்றிக் காண்பவன்

அணுவளவாம் அழிவில்லா பிரம்மத்தில் அடக்கமெல்லாம்
அனைத்து உயிர்களிலும் பரவிநிற்கும் பரம்பொருளாம்
அதுதான் ஆன்மா அதிலேதுவும் ஒட்டாதென்று
அறிந்தவன் ஞானி அறிவாய் அர்ஜுனா நீ
       
அத்தியாயம் 14 - குணத்ரய விபாக யோகம்

மகா இயற்கையாகும் எனது ஆலயத்தில்
உயிர்களின் காரணியாம் தந்தை நானே
உயிர்களின் உருவ காரணியே
அன்னையாம் இயற்கை அறிவாய் நீ

இயற்கையில் உண்டாகும் முக்குணங்கள்
சத்வம் ரஜஸ் தமஸ் என்றிவையாம்
நிர்மல ஒளிமயம் சத்வ குணம்
ஆன்மாவை ஞானத்தில் பிணைக்கும் அது

ஆசையும்பற்றும் ரஜோகுணம்
ஆன்மாவை காமத்தில் பிணைக்கும் அது
அஞ்ஞான காரணி தமோகுணம்
ஆன்மாவை சோம்பலில் பிணைக்கும் அது

முக்குணச்சேர்க்கை ஆகும் உயிர் இனம்
அவைவழி உயிரினம் செயல்படுமே
சத்வம் மேலிட்டால் தத்துவஞானம்
ரஜஸ் மேலிட்டால் பேராசையே

தமஸ் மேலிட்டால் அறிவிழந்த மயக்கம்
குணமேம்பாடே உயிர்களை வழிநடத்தும்
குணமேலிட்டால் பலன்கள் வேறுபடும்
இச்செயல்பாட்டை அறிந்தவன் அறிவாளி

கர்மபலன்களில் மயக்கம் இன்றியே
குணங்கள் கடந்து தான் வேறென்றறிந்து
எல்லோரிடமும் சமத்துவம் கொண்டங்கு
இன்பதுன்பங்களை சமமாக ஏற்று

மனச்சலனமின்றி என்னில் லயிப்பவன்
முக்குணம் கடந்த பரம்பொருளை அடைவான்

அத்தியாயம் 15 - புருஷோத்தம யோகம்

இயற்கையில் வாழ்க்கை ஓர் அற்புதமரமாகும்
மேலே வேருமாய் நிற்பவன் நான்முகனே
முக்குணங்கள் வளர்ந்த கிளைகளுமாய்
நான்மறைகள் அதன் இலைகளாக

ஐம்புலக்குணங்கள் தளிர்களாக
நிற்கும் இம்மரத்திற்கு ஆதி அந்தமில்லை
கர்மச்சேர்க்கையால் பூவுலகில் பார்த்தா
இம்மரத்தின் வேர்கள் பரவிடும் கீழேயும்

ஆசையும் மோகமும் விட்டொழித்து
ஆன்மகுணம் நன்கு கண்டறிந்து
ஆன்மஞானத்தில் ஈடுபட்டு
இந்தமரத்தின் மூலம் கண்டறிந்தந்த

ஆதிமூலத்தை சரணடைந்தால்
அதுவே எனதுயர்ந்த இடமாகும்
எனது ஒருகூறாம் ஆன்மாவே
எல்லா உயிர்களின் உயிரோட்டம்

உடலை அடையுங்கால் ஐம்புலனில்
உயிரினங்களை இழுத்துச் செல்லும்
உடலை விட்டங்கு போயாலோ
அவ்வைந்தையும் தன்னுடன் கொண்டு செல்லும்

அழிவில்லா இந்த ஆன்மாவை
அறிந்தவர் ஞானக்கண் படைத்தவரே
ஒளிப்பிழம்பாய் நிற்பவன் நான்
அன்னம் செரிக்க உதவும் நெருப்பும் நான்

உள்ளத்தில் குடிகொண்டிருப்பவன் நான்
ஞாபகம் ஞானம் வளர்ப்பவன் நான்
க்ஷர-அக்ஷரரில் உயர்ந்த ஆண்மகன் நான்
புருஷோத்தமனாம் பரமாத்மா நான்

அத்தியாயம் 16 - தெய்வ அசுர சம்பத் விபாகயோகம்

அன்பும் அஹிம்சையும் ஆன்மீக நாட்டமும்
மென்மையும் நேர்மையும் கருணையும் தியாகமும்
தூய்மையும் வாய்மையும் பொறுமையும் வீறும்
அடக்கமும் வெட்கமும் சலனமில்லாமையும்

தன்னிலை தவறாத புலனடக்கமும்
தெய்வீக ஒளியும் தெய்வக்குணங்களாகும்
காமம் கோபம கடுஞ்சொல் இவையோடு
ஆடம்பரம் அஞ்ஞானம் அடங்காமை

காமத்தால் உண்டாகும் இவ்வுலகம் பொய்யென்ற
வாதமும் அசுரகுணத்தன்மை என்றறிவாய்
அளவில்லா பேராசை மதிமயக்கம் கொண்டிவர்கள்
அதர்மவழிகளிலே பொருளீட்டி மகிழ்ந்திடுவர்

அகம்பாவம் கொண்டிவர் நான் என்ற போதை ஏறி
ஆடம்பரமாக யாகங்கள் செய்திடுவர்
தன்னை அல்லாமல் பிறரை நேசிக்கிலர்
தமோகுண மேலிட்டால் தரந்தாழ்ந்தவரிவர்

இவ்விரு குணங்களை செவ்வனே அறிவாய்
மறைநெறி அறிந்து கர்மம் கைக்கொள்வாய்

அத்தியாயம் 17 - குணத்ரய விபாக யோகம்

அர்ஜுனா அறிவாய் குணநிலை மூன்று வகை
சாத்வீகம் ராஜசம் தாமசம் ஆகுமிவை
சாத்வீகம் தேவகுணம் ராஜசம் யக்ஷகுணம்
தாமசம் பிரேதபூத குணமென்றறிவாய்

மனதில் பேராசையுடன் உடலை வருத்தி
மறைமுறை அற்றதவம் அசுரத்தன்மை
உணவும் தானமும் யாகமும் மூன்றுவகை
சுகமுள்ள குணமேன்மை உள்ளஉணவு சத்வம்

காரம் கசப்பு சூடு புளிப்பு இவை ராஜசம்
உலர்ந்ததும் பழையதும்  ஆனவை தாமசம்
ஒன்றிய மனதுமாய் பலனில் பற்றின்றி
செய்யும் யாகம் சாத்வீகமாகும்

பலனை வேண்டி அதீத ஆடம்பரமாய்
பலர் முன்னில் செய்வது ராஜசம் ஆகும்
வேதநெறி தவறியது தானங்கள் அற்றது
மந்திரம் காணிக்கை அற்ற யாகம் தாமசம்

பெரியோரை வந்தித்தல் தூய்மை நேர்மை பாலித்தல்
அஹிம்சை என்றிவை உடலின் தவம் ஆகும்
உண்மையும் இன்பமும் நன்மையும் கலந்த உரை
பிறரை வருத்தாத நல்வாக்கு என்றிவை

வாக்கினால் செய்யும் தவம் ஆகும் அறிவாய்
மனத்தெளிவு கட்டுப்பாடு மௌனம் மனத்தவம்
பரம்பொருளை முன்னிட்டு பலனை ஆராயாமல்
கவனமாய் செய்யும் தவம் சாத்வீகமாகும்

பலனைக்கருதி செய்வது ராஜசமே
மூர்க்கனாய் தன்னை வருத்துதல் தாமசம்
இடம் பொருள் ஏவல் இவை அறிந்து செய்யும்
எதிர்பார்ப்பற்ற தானம் சாத்வீகமாகும்

எதிர்பார்ப்புடனான தானம் ராஜசம்
இகழ்ச்சி அலட்சியம் சேர்ந்தது தாமசம்
பிரம்மத்தின் பெயர்களாகும் ஓம் சத் தத் இவை
எல்லா நற்கர்மத்திலும் கூறப்படும் அறிவாய்

அத்தியாயம் 18 - மோட்ச சந்யாச யோகம்

கர்மம் செய்திடினும் பலன் துறத்தல் தியாகம்
பலன் வேண்டி செய்யும் கர்மம் துறத்தல் துறவு
இன்றியமையாதவை வேள்வி தானம் தவம இவை
தியாக நோக்குடன் செய்ய வேண்டியவை

விதித்த கர்மம் துறப்பது தாமசம்
துன்பம் கருதி துறப்பது ராஜசம்
பற்றுதல் இன்றி விதித்த கர்மம்
பலனைத் துறந்து செய்வது சாத்வீகம்

நல்லவை அல்லவையாய கர்மம் முறையே
நாடலும் வெறுக்கலும் சாத்வீக குணமல்ல
முக்குணமும் கர்மமும் மனிதனில் உள்ளவை
இயற்கையாகவே நியமிக்கப்பட்டவை

மனிதனவன் சரீரம் ஐம்புலங்களுடன்
சுவாசம் பரமாத்மா என்ற இவ்வைந்தும்
மனிதனின் கர்மகாரணிகள் அதனால்
அகங்காரம் ஆகும் நான்செய்தேன் எனும் எண்ணம்

அறிவு அறிபவன் அறிபடும் பொருளிவை
கர்மகாரணிகள் ஆகும் நண்பா
செய்வழி செய்பவன் செயல் இம்மூன்றும்
கர்மம் நிறைவேற காரணிகள் ஆகும்

அனைத்து உயிர்கட்கும் ஒரே ஆன்மா என்பதும்
ஓரோர் உயிர்க்கும் ஆன்மா வேறென்பதும்
ஞானங்களாம் முறையே சத்வம் ராஜசமாம்
உண்மை அல்லாததில் ஓட்டுவது தாமசம்

கவனம் சிதறாத பற்றற்ற கர்மவினை
பற்றும் அகங்காரமும் கொண்ட கர்மவினை
மோகமேலிட்டு சக்திமீறிச செய்யும் கர்மம்
முறையே சத்வம் ராஜசம் தாமசமாம்

கர்மம் செய்பவனும் இம்மூவகை ஆகும்
நன்நெறியைக் கசடற கற்றல் சாத்வீகம்
முழுமை பெறாத இவ்வறிவு ராஜசம்
அதர்மமே தர்மம் என்றறிவு தாமசம்

மனம் புலன் அடக்கும் யோகம் சாத்வீகம்
பலன்கோரி புலன்வழி செல்லல் ராஜசம்
அதிமோகம் கொண்ட கர்வவினை தாமசம்
சாத்வீக சுகமது அந்திம சுகம் தரும்

ராஜச சுகமோ ஆதியில் சுகம் தரும்
உறக்கம் சோம்பலென்ற மயக்கம் தாமசம்
ஆன்மீகவழியும் அடக்கமும் நேர்மையும்
அந்தண குலத்தின் இயற்கை குணங்கள்

வீறும் பிரதாபமும் தானமும் ஆளுமையும்
அரசகுலத்தோரின் இயற்கை குணங்கள்
பசுக்களை மேய்த்தல் வாணிபம் விவசாயம்
என்றிவை வைசியரின் இயற்கை குணங்கள்

சேவனம் புரிந்து வாழ்வதென்பது
சூத்திரனின் இயற்கை குணமென அறிவாய்
குலதர்மம் காப்பவனே சிறந்தவன் ஆவான்
அவனில் ஆன்மாவை கடமையால் வந்திக்கிறான்

குலதர்மவழி துறத்தல் நன்மாக்கமல்ல
அரைகுறை ஆயினும் குலதர்மம் காத்தல் நன்று
எல்லாகுல தர்மங்களும் நன்மைதீமை உடையனவே
இயற்கையான இக்கர்மம் விடாமல் தொடர்வதே மேல்

அளவோடு உண்டும் அகங்காரம் விட்டொழித்தும்
அடக்கிய புலன்களுமாய் தனிமையில் தியானம் செய்து
அனைத்து உயிர்களிலும் சமநோக்கு கொண்டு
அபிமானம் அற்றவன் உள்ளம் என்னை நன்கறியும்

உன்பிறவிக்குணம் உன்னைவிட்டு ஒழியாது
உள்ளபடி குலதர்மமாம் போர் செய்வாய்
எனக்கே சமர்ப்பிப்பாய் கர்மம் கர்மபலன்
நன்கு ஆராய்ந்து நல்லதோர் முடிவெடுப்பாய்

என்ற உபதேசம் கேட்ட பார்த்தனும்
நன்றியுடன் வணங்கினான் நந்தகுமாரனை
அச்சுதா உணர்ந்தேன் அகங்காரம் ஒழிந்தேன்
அனைத்தும் உன்னில் சமர்ப்பணம் செய்தேன்

தெளிந்தேன் என்றே காண்டீபம் எடுத்தான்
தேவதேவனாம் கண்ணனைப் பணிந்தே
பரம்பொருளை ஒன்றிய பற்றற்ற கர்மயோகம்
ஞானமார்க்கமாகும் பக்தியோகம் என்றிவையை

பார்த்தன் அறிய உரைத்தனன் கண்ணன்
கவனமாய் படிப்பவன் கேட்பவன் நலம் பெறுவான்
அரியின் நினைவே அரியதவம் இது உண்மை
அறிந்து அர்ப்பித்தால் அடைந்திடுவர் முக்திநிலை

சமர்ப்பணம்

உன் திருவாய்மொழியாம் கீதையை கண்ணா
உன்னடி பணிந்தே சமர்ப்பணம் செய்தேன்
கண்ணா பொறுப்பாய் காப்பாய் அருள்வாய்
கணக்கிலா தவறுகள் செய்யும் இந்த ஏழையை

உலகில் எவரிலும் உள்ளவன் ஒருவனே
உயிர் என்ற பெயரில் ஆள்பவன் அவனே
உதவும் சிந்தையும் உயர்ந்த எண்ணமும்
உள்ளோர் உணர்வில் ஒளிர்பவன் அவனே

அங்கெங்கெனாதபடி எங்கும் நிறை காற்றென
அனைத்து உயிர்களிலும் நிறைகின்ற பரம்பொருளை
அறிந்து அனைவரிலும் ஒருமை காண்பவன்
ஆதவனேபோல் ஒளிர்ந்து நிற்பான்


சுபம்!    

All rights reserved for the poem. Leela Narayanaswamy©






 

       
   












Sunday, August 26, 2012

52.மலர்தாமரைமுக நாயகா வரதா


மலர்தாமரை முக நாயகா வரதா
மாதவா யாதவதிலகா
அமுதம் ஏந்திய மோகினி ரூபா
அலைமகள் நாயகா தேவா

அன்பர்க்கடியனே அஞ்சனவண்ணா
ஆவினம் மேய்த்த இடையா
அருளுக மங்களம் எங்கும்
பெருகுக பேரின்பம் என்றும்

அச்சுதா கேசவா அனந்தசயனா
குழலூதும் கோபகுமாரா
வருவாய் கண்ணா தருவாய்
வாழ்வில் மங்கலம் என்றும்

கண்ணா நலம் சுபமே
கனிவாய் அருள்வாயே
கண்ணா அருள்வாயே
நலம் சுபம் ஜெயம் என்றுமே
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

23aമലയാള



 മലയാള ദേശത്ത് മാവേലി വരുന്ന കാലം
 നാടാകെ ആഘോഷം മത്സരം സമ്മാനം

 വീടിന്‍റെ മുറ്റത്ത് പൂക്കളം പുലരിയില്‍
 പാടിക്കളിക്കുന്നു ഊഞ്ഞാലിട്ടൊരുകൂട്ടം

 മാദേവന്‍ വാമനന്‍ എഴുന്തള്ളും നേരം
 തിരുവോണ സദ്യയുമായ്‌ സ്വാഗതം സ്വാഗതം

 തിരുവോണക്കോടിയുമായ്‌ കളിചിരിതൂകി ബാലര്‍
 തിരുനാളില്‍ മിത്രമുമായ്‌ ഓടിക്കളിയായ്

 ഈചിരി എന്നെന്നും മായാതെ കാക്കണേ
 ഈരടിയില്‍ മൂണ്ലോകം അളന്ന നാരായണ
   

23.ஆவணித் திருவோண நன்னாளில் அதிதிக்கு



  ஆவணித் திருவோண நன்னாளில் அதிதிக்கு
  அந்தணச் சிறுவனாய் அவதரித்தவாமனா

  பக்தனாம் மகாபலியை பக்குவப்படுத்திட
  யுக்தியாய் மூன்றடி மண் யாசித்த பாலா  (ஆவணி)

  ஈரடியில் மூவுலகும் அளந்தபின் மகாபலியின்
  திருமுடியில் மூன்றாமடி பதித்த பரந்தாமா
  பக்தனாம் மகாபலியை அன்போடாதரித்து
  பாதாள லோகமதை பரிந்துரைத்த தேவா (ஆவணி)

  அத்தம் முதல் பத்து நாளும் அனைத்து வீட்டு வாசலிலும்
  அழகழகாய் பூக்கோலம் திருநாள் கோலாகலம்
  இனிவரும் காலமும் இதேபோல் இன்பமுற
  இரங்கி அருள்வாய் நீ அலைமகள் தேவா (ஆவணி)


Sunday, August 5, 2012

51.அறுகம்புல் அணிந்தோனே




  அறுகம்புல் அணிந்தோனே ஆனைமுகனே சரணம்
  இமையவன் மகள் மகனே ஈசனின் திருமகனே (அறுகம்புல்)

  உந்திய வயிற்றோனே வந்தனம் சந்ததம்
  ஊதுகுழல் ஏந்தியோனின் மனமுகந்த மருமகனே
  எருக்கம்பூ சூடியோனே ஏகதந்தனே ஐயா
  ஐங்கரனே சரணம் ஐயங்கள் களைந்திடுவாய் (அறுகம்புல்)

  ஒளிரும் திருமேனியனே ஓங்காரரூபா சரணம்
  முப்பழப்பிரியோனே முருகனுக்கு மூத்தோனே
  அப்பமொடவல் பொரி மோதகம் ஏற்றிடுவாய்
  எதிருமிடர் களைந்திடுவாய்  ஏத்தமிட்டு தொழுதோமே (அறுகம்புல்)

   All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Sunday, June 10, 2012

ஸ்ரீ ராமன் கதை



விநாயகன் துதி
கணநாதா நீ துணை வருவாய்
ஹரியின் கதையைப் பாடிடவே
த்ரேதாயுகத்தில் நிகழ்ந்ததுவே 
தெள்ளத்தமிழில் இசைத்திடவே
தசமுகராவணன் இலங்கை மன்னன் 
தாயாம் சீதையை சிறை எடுத்தே
தர்மநெறி தனைத் துறந்த கதை
தாசரதி அவனை அழித்த கதை (8)

பால காண்டம்
ஒரே நினைவுதான் உள்ளத்திலே என்றும் 
ஒரே நினைவுதான் உள்ளத்திலே
ஹரேராம என்றோதுவதே 
பரம புண்ணிய நாமமதே

அயோத்தி மன்னன் தசரதன் மனைவியர்
கோசலை கைகேயி சுபத்திரை மூவராவர்
மழலை வேண்டிச் செய்த யாகமுடிவில் பெற்ற
மதுரமாம் பாயசம் உண்டனர் மனைவியர்

சித்திரை வளர்பிறை நவமியில் புனர்பூச
நன்னாளில் கோசலை பெற்றாளோர் ஆண்மகவை
கைகேயி பெற்றனள் பூசத்தில் ஆண்மழலை
ஆயில்யத்தில் சுபத்திரை இரட்டையரை ஈந்தனள்

ரகுகுலம் தழைக்க வந்த கோசலை புத்ரனை
குலகுரு வசிட்டரும் ராமன் என்றழைத்தாரே
ராமன்தன் பின்பிறந்தோர் மூவரின் பெயராகும் 
முறையே பரத சத்ருக்ன லக்ஷ்மணரே

நால்வரும் கலைகல்வி விற்பயிற்சி தேறினர்
பாசம் பணிவன்பென்ற பண்பாட்டில் சிறந்தனர்
நான்கு மக்களின் நன்னடத்தை கண்டு 
நகர மக்கள் மனம் மகிழ்ந்து களித்தனர்1

வில்லேந்தியே ராமலக்ஷ்மணர் இருவரும் 
விஸ்வாமித்ரருடன் சென்றனரே
பலை அதிபலை மந்திர சக்தியில் 
பாலகர் களைப்பற்று பலம் பெற்றனரே 

தாசரதியின் கணை வீச்சினிலே 
தாடகை மூச்சிழந்து வீழ்ந்தனளே
அக்னி பொங்கும் யாககுண்டமதை பாலரிவர்
அசுரர் அண்டாமல் காத்தனரே     (24)

கல்லைப் பெண்ணாக ஆக்கியதே 
கருணாமூர்த்தியின் அடித்துகளே
கயிலைநாதனின் வில்லினையே 
மிதிலையில் ராமன் முறித்தானே 

மைதிலி மகிழ்வுடன் வந்தணைந்தே 
பதியாக ராமனை ஏற்றனளே
ஜனகன் மகளினை இளவல் லக்ஷ்மணன் 
ஜனங்கள் கொண்டாட ஏற்றனனே (32)

மிதிலை இளமகளிர் நால்வருமே 
அயோத்தி நால்வருடன் இணைந்தனரே
அரசகுலம் அறுக்கும் சபதமுடை பரசு
ராமன் சினம் ராமன் தீர்த்தனனே  (36)

அயோத்தியா காண்டம்
ராமனை இளவலாய் முடி சூட்டிடவே 
தசரதன் சபைகூட்டி அறிவித்தனனே
அன்னையர் மூவரும் அகமகிழ்ந்தே 
அணிமணி தாதியர்க்கு பரிசளித்தனரே

அங்குதான் விதிவிளையாடியதே அந்த 
மந்தரையாம் தாதி ரூபத்திலே
தக்கசமயம் என்றே தாயின் மனதினை 
மந்தரை கலைத்தாளே தந்திரத்தாலே (8)

எறும்பூர்ந்து கல்லும் தேயும் என்றபோலே 
அறுந்ததே கைகேயி அன்புள்ளமே
மந்தரையின் சூதுசொற்களிலே 
மாறியதே மாசில்லா தாயின் மனமே

ராமனை அகற்றியே அங்கு பரதனுக்கே 
முடிசூட்ட அத்தாய் விழைந்தனளே
அப்பாவி பரதன் தாய்மாமன் நாட்டிலே 
இப்பாவச்செயல் ஒன்றும் அறிகிலனே (16)

ஆள்வது பரதன் அயோத்தியை என்றும் 
ஆரண்யம் அண்ணலுக்கீரேழு ஆண்டென்றும்
வாய்மை தவறாத தசரதனிடமே 
வரமாய் கைகேயி பெற்றிடவே

ஈரேழு ஆண்டுகள் ராமனைப் பிரிவேன் 
என்றேங்கி தசரதன் வீழ்ந்தானே
பாரிலுள்ளோர் மனம் பதறிடவே 
தேரேறி ராமன் வனம் சென்றானே (24)

படகோட்டி குகனை அரவணைத்து 
நாம் ஐவரானோம் என்று பூரித்தானே
தந்தைசொல் தட்டாது கானகத்தே 
தம்பியுடன் சென்று வாழ்ந்தனனே

அசுரரை வேரோடு அழித்திடவே ராமன் 
அன்னையுடன் வனமும் சென்றனனே
நல்லோர்கள் யாவரும் வாழ்ந்திடவே 
வில்லுடன் வீரரிவர் சென்றனரே (32)

அழுத கண்களுடன் அண்ணலிடம் தன் 
அன்னையுடன் பரதன் வந்தானே
தந்தை விண்சேர்ந்த சேதி கேட்ட ராமன் 
தம்பியருடன் கண்ணீர் சொரிந்தனனே 

அயோத்தி வேண்டாம் அண்ணல் போதுமென்றே 
ராமனிடம் பரதன் கரைந்தானே
பரதனை அன்புடன் அரவணைத்தே ராமன் 
பாதுகையை பரிவுடன் கொடுத்தனனே (40)

பக்தியுடன் அதனை சிரசின்மேலேற்று 
பரதனும் அயோத்தி சேர்ந்தனனே
பாதுகைக்கு முடிசூட்டி பூஜித்த பரதன் 
நந்திக்கிராமம் சென்று வாழ்ந்தனனே

மரவுரி உடுத்தே காய்கனி உண்டே 
துறவற வாழ்வு பரதன் வாழ்ந்தனனே 
அண்ணனை என்றும் மனதில் நினைத்தவாறே 
அரசாட்சி முறைப்படி செய்து வந்தனனே (48)

ராமனும் அவ்விடம் அகன்று நடந்தே 
மாமுனிவர் வாழும் தபோவனம் வந்தனனே 
அத்திரி முனிவர் கற்பரசி அனுசூயை 
என்றிவரை  ராமன் கண்டனனே

பின்விளைவதை முன்காணும் முனிசதி 
பொன்னகையை அங்கு பரிசளித்தனளே
அஞ்சனமிழியாள் சீதை அதனை ஏற்கவே 
ஆரண்யம் நோக்கி நடந்தனரே   (56)

ஆரணிய காண்டம்
விரூபனாம் அரக்கன் விராடனும் வந்தே 
சீறியே சீதையை அபகரித்தனனே 
அரக்கனைக் கொன்றே மோட்சம் அளித்தே 
மூவரும் பயணம் தொடர்ந்தனரே 

விந்திய மலையை அடக்கிய மாமுனி 
அகத்தியரை ராமன் கண்டனனே 
அன்புடன் ராமனுக்கம்புவில் வாளினை 
அளித்த முனிவரும் ஆசி கூறியே  (8)

இப்புனித ஆயுதங்கள் உனதாகும் ராமா
அதர்மம் அழித்து வெல்க நீ என்றார் 
பணிந்தனைத்தையும் பெற்றே மூவருமே 
பஞ்சவடிதீரம் வந்தடைந்தனரே 

காமத்தால் கலகம் செய்த சூர்ப்பனகை அங்கு 
மூக்கறுபட்டு லங்கை ஓடினளே
தங்கை கோலம கண்டு லங்கைவேந்தனும் 
சிங்கம்போல் சினம்கொண்டு சீறினனே (16)

அசுரபதி ஆணைப்படி கரதூஷணர் வந்தே 
அண்ணலுடன் போரிட்டு மடிந்தனரே
தோல்விச்செய்தி கேட்ட ராவணனோ தன் 
நிலைமறந்து இழிச்செயலில் இறங்கினனே 

மாமன் மாரீசனை மாயமானாக்கி 
மங்கை சீதைமுன் நிறுத்தினனே
அங்கயற்கண்ணியாம் அழகி சீதையும் 
அதனுடன் கொஞ்சிட விழைந்தனளே  (24)

வஞ்சகம் அறியாத கோசலை புத்ரனும் 
கொஞ்சும் மான் பின்னே ஓடினனே 
தொலைதூரம் ஓடிய மானாய மாரீசனை 
கணைவீசி ராமன் பிடித்தனனே 

அடியேற்ற மாரீசன் சுயரூபம் கொண்டே 
அண்ணலின் குரலில் அங்கு அலறினனே 
லஷ்மணா!சீதே!என்ற கூக்குரல்கேட்டே 
உன்அண்ணன்ஆபத்தில் உடன்செல்வாய் என்றே(32)

அச்சத்தால் ஏவினாள் சீதை தம்பியை 
அதுகேட்ட லஷ்மணன் அண்ணியைப் பணிந்தே
அஞ்சவேண்டா அது அண்ணன் குரலல்ல 
அசுரனின் மாயம் அமைதியாவீர் என்றான்

சினங்கொண்ட சேதி கணம் மதி இழந்தே 
சீறினாள் துரோகி உன் எண்ணம் புரியுதென்றாள்
சுட்டெரித்த இழிச்சொல் இதயம் துளைத்திடவே 
சட்டென தரையில் கோடிட்ட லஷ்மணன் (40)

இனிகணம் நில்லேன் உடன்செல்வேன் தாயே 
இக்கோடு தாண்டவேண்டா என்றடிபணிந்தே 
கலங்கிய கண்களுடன் அகன்றுசென்றனனே 
கானகத்தில் ஆச்ரமத்தில் தனித்தானாள் சீதை 
  
தசமுகனின் சூழ்ச்சி வலையில் அங்ஙனமே  
தசரதமக்கள் அஹோ வீழ்ந்தனரே
அன்னை சீதையை சிறை எடுத்தசுரன் 
வான்வழி விமானத்தில் பறந்தனனே (48)

எதிர்த்த ஜடாயுவின் சிறகை வெட்டியே 
ராவணன் இலங்கை நோக்கி  பறந்தனனே
அஞ்சிய சீதையும் நகைகளை கழ்ற்றியே 
மலைஉச்சி நோக்கி எறிந்தனளே  

அசுரன்  லங்கையில் அசோகவனத்தில் 
சீதையை சிறையில் வைத்தனனே 
மண்மகளைத்தேடி சோதரர் இருவரும் 
கானகம் முழுவதும் அலைந்தனரே  (56)

அசுரனால் அறுபட்ட சிறகுடனே அங்கு 
அல்லலுறும் ஜடாயுவைக் கண்டனரே
அன்புடன் பறவையை மடியில் இருத்தியே 
அண்ணலும் வருடிக்கொடுத்தனனே-உன்

அன்புமனைவியை அபகரித்ததோர் 
அசுரன் ராவணன் என்று கூறியே 
அப்பறவை தன்னுயிர் பிரிந்ததுவே 
அண்ணலும் கண் கலங்கி நின்றனனே(64)

தந்தையின் நண்பனாம் பறவையை எரித்தே 
அந்திமக்கடன் ராமன் செலுத்தினனே  
பயணத்தை தொடர்ந்தே கபந்தனைக் கொன்றே 
பம்பைஆற்றின் கரை வந்தடைந்தனரே (68)

கிஷ்கிந்தா காண்டம்

பரிவுடன் கனிதந்து ராமனை உபசரித்தே 
சபரியும் ஒருவழி காட்டினளே
தாசரதியும் அதனை அநுசரித்தே 
தம்பியுடன் பின்னும் நடந்தனனே 

வாலிசோதரன் சுக்ரீவனை நாடி 
ரிசியமுக மலையடி சேர்ந்தனரே
அந்தண உருவில் அடிவாரத்தில் 
அனுமனும் அங்கு வந்தனனே (8)

கம்பீரமுகமும் கருணைப்பார்வையும் 
காண்பது ராமன் என்றறிவித்ததுவே
அஞ்சனைமகனது அறிவுத்திறன் கண்டே 
அயோத்தி இளவலும் அதிசயித்தானே 

அந்தணன் யார் என்று கண்டுகொண்டானே 
மாருதியும் உருமாறி மண்டியிட்டானே
அன்பும் பண்பும் நிறை அஞ்சனைமகனும் 
ராமனை மலைசிகரம் சேர்த்தனனே (16)

பாசமுடன் நட்பின் இலக்கணமாய் அங்கு 
வானரன் சுக்ரீவன் வந்தானே
பூமகள் உதிர்த்திட்ட நகை கண்டு அங்கு 
பூமுகன் ராமன் மனம் நெகிழ்ந்தானே

மனைவியை இழந்த நண்பனின் கதைகேட்டு 
மலர்முக ராமன் மனம் நொந்தானே
தம்பியின் மனைவியை நாடுபவன் நண்பா 
தண்டனைக்குரியவன் ஆவானே  (24)

தளரவேண்டாம் நீ வாலியை வெல்வேன் என்றே 
தாசரதி நண்பனிடம் சூளுரைத்தானே
வாலியை வீழ்த்தியே வீரன் ராமனும் 
சுக்ரீவனின் துயர் களைந்தானே 

கிஷ்கிந்தைக் கரசனாய் முடிசூட்டி ராமன் 
வானரன் சுக்ரீவனை வாழ்த்தினனே
மன்னன சுக்ரீவன் சபையில் அனைவர்க்கும் 
மங்கையைத் தேடவே ஆணை இட்டனனே (32)

மாருதியை மெல்ல தனியே அழைத்தே 
மரகதவண்ணன் ராமன் கூறினனே
என் உயிர்த்துணைவியை காண்பவன் நீயே 
என்துயர் களையும் தூதனும் நீயே 

என்விரல் மோதிரம் கைக்கொள்வாயே 
என்னவள் சீதையிடம் சேர்ப்பிப்பாயே
அஞ்சனைமகனே போய்வா நீயே 
ஆபத்து வாராமல் காப்பேன் நானே (40)

என்று கூறியே ராமனும் அங்கு 
மாருதியை வாழ்த்தி அனுப்பினனே
எங்கே மங்கை என்று வானரசேனையும் 
நான்கு திசையிலும் தேடினரே  (44)

சுந்தர காண்டம்

வாலிமைந்தனும் வாயுபுத்ரனும் 
வானரர் பலரும் ஜாம்பவானும்
கருங்குழலாளாம் சீதையைத் தேடியே 
கன்யாகுமரிமுனை வந்தனரே 

தென்திசையில் அலைகடலைக் கண்டு நின்றே 
என்செய்வோம் என்று ஏங்கினரே
இறகிழந்து நின்ற ஜடாயுசோதரன் 
இரை தேடி அங்கே வந்தனனே (8)

நிராசையுடன் நிற்கும் வானரர் வாய்வழி 
நீலநிற ராமன் கதை அறிந்தனனே
கழுகரசனும் தன் தெளிந்த பார்வை கொண்டு 
ஆழ்கடல் கடந்து நோக்கினனே 

கடலின் அக்கரையில் லங்காநகரினில் 
காணும் காட்சிதனைக் கூறினனே
அசோகவனத்தில் அசுரப்பெண்கள் சூழ 
அன்னை சிறையில் என்றுரைத்தனனே (16)

பாயும் அலைகடலைக் கடக்கும் வானரன் 
யார் என்றதோர் வினா எழுந்ததுவே
மடியாவரம் பெற்ற மாருதியே என்ற 
விடையும் ஜாம்பவான் உரைத்தனனே-அந்த

வானரவீரனும் வானில் உயர்ந்தே 
ஜய்ஸ்ரீராம் என்றே பறந்தனனே
அனுமனின் அறிவும் திறனும் அறியவே 
அனுப்பினான் இந்திரன் நாகதேவதையை (24)

சுரசையும் வந்தே அனுமனின் எதிரே 
அளவில் பெரிதாகி வாய் திறந்தனளே
அறிவுடை அனுமன் அளவில் சிறிதாகி 
வாயில் நுழைந்தவள் செவிவழி வெளிவந்தே

வந்தனம் கூறி ஆசிகள் பெற்றே 
வாயு வேகமாய் பறந்தனனே
நிழலுண்ணும் அரக்கியும் நீலக்கடலிலே 
அனுமனைப் பிடித்து ஆர்ப்பரித்தனளே (32)

அழுத்தி அவளை ஆழ்கடலில் அழித்தே 
அனுமனும் பயணம் தொடர்ந்தனனே
மைநாகமலையும் விநயத்துடனே 
அனுமனை இளைப்பாற அழைத்தனனே

நன்றி கூறியே மலையனை வாழ்த்தியே 
விண்வழி வானரன் பாய்ந்து சென்றனனே
அக்கரை அடைந்த அனுமனும் அங்கு 
அரண்மனைக் காவல்கண்டு அதிர்ந்து நின்றனனே(32)

லங்கிணியாம் காவல் வீராங்கனையையே 
லாவகமாகவே வெற்றி கொண்டனனே
அரக்கியும் அனுமனுக்காசிகள் கூறியே 
அசோகவனம் செல்வாய் என்றாளே-அந்த

சொல்லின் செல்வனைத் தூதுகொண்டு ராமன் 
செல்வியின் துயரைத் துடைத்தனனே
மோதிரம் கைக்கொண்ட மைதிலியும் 
மாருதியின் வாக்கில் மகிழ்ந்தனளே (40)

அஞ்சனை மகனே உணர்த்துவாய் ராமனை 
அன்றொரு காகம் கண்ணொன்று இழந்த கதை
என்னவரைச் சேர்ப்பிப்பாய் இச்சூடாமணியை 
என்னுள்ளம் தெளிந்தது செல்கநீ என்றாள்

அன்னையின் துயரம் நேரில் கண்டே 
அஞ்சனைமகன் மனம் நொந்தானே
அசோகவனத்தில் கலகம் செய்தே 
அநேக மரங்களை அழித்தனனே (48)

தானவவீரரும் சினங்கொண்டு வந்தே 
வானரவீரனை எதிர்த்து நின்றனரே
அக்ஷயகுமாரன் உள்ளிட்ட பலரும் 
அஞ்சனைமகனால் அழிந்து போயினரே

இந்திரஜித்தும் மந்திரக்கணையால் 
மாருதியைக் கட்டி சபைக்கு வந்தனனே
ராவணசபையில் வானரவீரன் 
ராமதூதனாய் நிமிர்ந்து நின்றனனே (56)

சரிசமமாக வாலிருக்கையில் அமர்ந்தே 
நெறிமுறைகள் பல போதித்தனனே
தூதுவன் அனுமனை அவமதித்தே 
ராவணன் வாலில் தீ வைத்தனனே 

அளவில்லாச்சினம் கொண்ட ஆஞ்சநேயன் 
அத்தீகொண்டே லங்கையை எரித்தனனே
இங்கிதமாகவே ஜானகி விடைகூற 
கிஷ்கிந்தை வந்து சேர்ந்தனனே (64)

அன்னையைக் கண்ட சேதியை அனுமன் 
அயோத்தி இளவலிடம் உரைத்தனனே
கூடாரத்தில் காகம் கண்ணிழந்த கதை கூறி 
சூடாமணி ஏற்பீர் என்று பணிந்தனனே

அனுமனின் மொழியும் சூடாமணியும் 
அண்ணலை வெகுவாக நெகிழ்வித்தனவே  
தர்மம் காக்கச் செய்வோம் போர் என்றே 
தாசரதி அறிக்கை விடுத்தனனே (72)

யுத்த காண்டம்

அசுரவேந்தனின் அரசசபையிலே 
அநேக வாதங்கள் எழுந்ததுவே
அனலுக்கிரையான லங்கைநகர் ஒருபுறம் 
அஞ்சனைமகனது சாகசம் ஒருபுறம் 

யாருமறியாதவன் தூதுவனாய் வந்தே 
நேரில் சீதையைக் கண்டது மறுபுறம
பாழ்ச்செயல் எனினும் ஊழ்வினைப் பயனால் 
சூழ்சுற்றம் ராவணனை ஆதரித்ததுவே (8)

அதர்மவழி என்றும் அழிவில் முடியும் அண்ணா 
அன்னை சீதையைத் திருப்பிவிடு -இது
தற்காப்பாகும் என்றே தசமுகனிடமே 
தம்பி வீடணன் உரைத்தனனே 

உபதேசமா நீ பரதேசம் போ என்றே 
கோபித்து ராவணன் கடிந்துரைத்தானே
சரணம் என்றுவந்த வீடணனை ராமன் 
கருணைக்கரம் நீட்டிக் காத்தனனே (16)

கடல்போல் வானர சேனையுடன் ராமன் 
கடல்மேல் அணை எடுத்துச் சென்றனனே
தாசரதி ஆணைப்படி தூதனாய் அங்கதன் 
அசுரபதியைக் காண வந்தனனே

அறிவுரை கேட்ட அசுரன் சினம் கொண்டே 
அங்கதனைக் கட்டியிட ஆணையிட்டனனே 
அசுரர் பலரையும் அழித்த அங்கதன் 
அரண்மனைச்சிகரம் நொறுக்கினனே (24)

அங்கதன் தூதும் அங்ஙனம் முடிந்திட 
அசுரர் படையுடன் வந்தனரே
போரிட்ட குமாரர் அனைவரும் அழிந்திட 
போரிட ராவணன் நேரில் வந்தனனே

அநீதியின் உருவமாம் ராவணன் அங்கு 
அனைத்து ஆயுதமும் இழந்து நின்றனனே
என்றும் அறவழி காக்கும் ராமனும் 
இன்று போய் நாளை வா என்றனுப்பினனே(32)

சேதி கேட்ட மேகநாதன் சினத்துடன் 
நாகபாணம் ஒன்றை ஏவினனே 
கருடனின் வரவால் நாகம் விலகவே 
ராமலக்ஷ்மணர் மயக்கம் தெளிந்தனரே

கும்பகர்ணனும் போரிட்டே ராமன் 
அம்புமழையினில் அழிந்தனனே 
குலம் காத்திடவே இந்திரஜித்தும் 
நிகும்பலையில் யாகம் செய்யத்துணிந்தனனே(40)

வீடணன் அனுமன் இவரின் துணையுடன் 
லக்ஷ்மணன்அங்கு சென்றனனே
லங்கை இளவலாம் இந்திரஜித்தினை 
லக்ஷ்மணன் கொன்று வீழ்த்தினனே 

ஆத்திரம் பீறிட சக்தி ஆயுதம் 
ஏவினான் ராவணன் வீடணனிடமே
சரணம் புகுந்தோனைக்காக்க எண்ணியே 
சரத்தை லக்ஷ்மணன் தாங்கி வீழ்ந்தனனே (48)

அறிவுடை ஜாம்பவான் அன்புடனனுமனை 
அனுப்பினான் சஞ்சீவிமலையைக் கொணரவே 
அனுமனும் மூலிகை மலையை பெயர்த்தே 
விரைவுடன் போர்க்களம் வந்தனனே 

புனிதமாம் மூலகைக்காற்று கொள்ளவே 
புத்துயிர் பெற்றேழுந்தான் லக்ஷ்மணனே
இறந்து கிடந்த பல வானரரும் உடன் 
இனிய காற்று கொண்டே உயிர்த்தெழுந்தனரே(56)

அகஸ்தியர் வழி ஆதித்யஹ்ருதயம் ராமன் 
அறிவுபதேசம் பெற்று தெளிந்தனனே 
அறப்போர் மீண்டும் தொடங்கிட ராமன் 
அனுமனின் தோளில் அமர்ந்தனனே

அதுகண்ட இந்திரன் தேரும் சாரதியும் 
அனுப்பி வைத்தனனே பணிவுடனே 
மாற்றான் மனைவியை கைப்பற்றேல் என்றே 
மண்டோதரியும் மன்றாடினளே   (64)

அழிவை நெருங்கி நின்ற அசுரவேந்தனோ 
அநீதிவழியே நடந்தனனே
அறிவிலி அசுரன் அகந்தை மேலிட 
வெறியுடன் போரிட வந்தனனே

பலமுறை அறுத்தும் ராவணன் தலைகள் 
பலமுடன் மீண்டும் உயிர்த்து வந்தனவே
அமுதகலசம்  அவன் வயிற்றில் உள்ளதென்றும் 
அதுவே அவனது ஆயுள்காப்பென்றும் (72)

இளையவன் வீடணன் பணிவுடன் கூறவே 
ஏவினான் ராமன் அக்னிபாணத்தையே
அமுதகலசம் உடன் சக்தி இழக்கவே 
அதிர்ந்து போனான் அசுரன் ராவணனே

அறவழி துறந்த அசுரன் ராவணனும் 
உறவுடன் உயிரைத் துறந்தானே 
அதுகண்ட அங்கதன் முதலாய வானரர் 
ஆர்ப்பரித்தனரே வெற்றிக்கூவலுமாய்  (80)
  
அகமகிழ்ந்தனுமன் அன்னை சீதையை 
அணிகலன் அணிவித்து அழைத்து வந்தனனே
நாயகன் காலடி பணிந்தெழுந்த அன்னை 
அண்ணலின் கண்நோக்கில் அகன்று நின்றனளே

நெறிமுறை தவறாத ராமன் சீதையிடம் 
நெருப்பில் புகுந்தெழ ஆணை இட்டனனே
அன்னை ராமனை நோக்கி நின்றனள் 
தானவர் வானரர் கேட்க மொழிந்தனள் (88)

அன்பின் வடிவமே அயோத்திராமா 
பண்பின் சிகரமே பார்போற்றும் ராமா
நேர்வழி காக்கும் தசரதராமா 
நெருப்பும் கற்பும் ஒன்றே ஸ்ரீராமா

என் பிழை நான் அறிந்தேன் ரகுராமா 
வன்சொல்லால் சுட்டெரித்தேன் இளவலை ராமா
பேதமில்லா நீதி இது ராகவா ராமா 
மீதமற என்வினையை தீ சுடும் ராமா (96)

இங்ஙனம் கூறியே ராமனை வலம் வந்தே 
மறுகணம் தீயில் சீதை மறைந்தனளே
வானவர் அனைவரும் பூமழை பொழிந்தனர் 
வானுயர் தீயில் நின்று சீதை எழுந்தனள்

கற்பெனும் காப்பு பெண்டிரைக் காக்கும் 
காலம் நேரம் அவர் சொற்படி நிற்கும்
அன்புமனைவியை ஆட்கொள்வாய் ராமா 
ஆனந்தமாகவே அயோத்தி செல்வாய்  (104)

என்று கூறியே தேவர்கள் வாழ்த்திட 
மண்மகளை நோக்கி ராமன் வந்தனனே
வெற்றிமுழக்குடன் வீரன் ராமன் 
கற்பின்செல்வியைக் கைக்கொண்டனனே

வானளாவும் ஆனந்த ஓசையுமாய் 
வானரர் அனைவரும் வந்தனரே
சீதாராமனாய்க் காட்சி தரும் அண்ணல் 
பாதம் பணிந்து வலம் வந்தனரே  (112)

லங்கையிலே முடிசூடிய வீடணனை 
செங்கமலக்கண்ணன் ராமன் வாழ்த்தினனே
விண்வெளிக்கப்பலாம் புஷ்பக விமானமும் 
மண்ணில் இறங்கி அங்கு வந்ததுவே 

தன்பின்னோன் தன்னைத்தொடர்ந்திடவே ராமன் 
பொன்மகளுமாய் அதிலமர்ந்தனனே
மாருதி சுக்ரீவன் வீடணன் அங்கதன் 
மற்றுள்ள வானர வீரர்களும்   (120)

மகிழ்ந்து பணபாடி பின்தொடர்ந்திடவே 
எழுந்தங்கு விமானம் பறந்ததுவே
மகாமுனிவராம் ஸ்ரீபரத்வாஜர் தம் 
மரக்குடிலை வந்தடைந்ததுவே 

அனைத்தும் துறந்த முனி உபசரிப்பில் 
அனைத்து வீரரும் மகிழ்ந்தனரே
பதினான்கு ஆண்டும் முடிந்தும் ராமனை 
காணாது தவித்த பரதனும் விரைவில் (128)

தன்னுயிர் ஒடுக்கவே தீ வளர்த்தனனே 
தாங்காத துயரமுமாய் வளம் வந்தனனே 
தக்க சமயத்தில் அனுமனை ராமன் 
தம்பி பரதனிடம் அனுப்பினான் தூதனாய்

அறிவுடை அனுமன் பறந்தங்கு வந்தே 
பரிவுடன் பரதனை தடுத்து நிறுத்தியே 
விரிவாய் உரைத்தனன் ராமனின் வரவை 
வெகுவாய் மகிழ்ந்தனர் பரதசத்ருக்னர் (136)

பாசத்துடிப்புடன் சத்ருக்னனுமாய் அங்கு 
பரதன் ராமனிடம் வந்தானே 
மகிழ்வுடன் மக்கள் வாழ்த்திடவே ராமன் 
மாளிகை நோக்கி நடந்தனனே

பரதன் அயோத்தியை ராமனிடம் 
பாதுகை வழியே சேர்த்தனனே 
எண்திசையும் பறந்துசென்றே புனிதநதிகளிலே 
பொற்குடங்களில் நீர்நிறைத்தனுமன்  (144)

கலசங்களுமாய் அயோத்தி வந்தனன் 
குலகுரு வசிஷ்டரும் ராமனை நீராட்டி 
ரகுகுலமணிமகுடம் முடிசூட்ட ராமன் 
வானவரும் வாழ்த்த அரசேற்றனனே 

பட்ட துயரெல்லாம் பறந்திடவே ராமன் 
பட்டாபிராமனாய் திகழ்ந்தானே
பட்ட துயரெல்லாம் பறந்திடவே ராமன் 
பட்டாபிராமனாய் திகழ்ந்தானே  (152)

இளையவர் இருபுறம் சாமரம் வீசிட 
இதமுடன் பரதனும் பொற்குடை பிடித்திட
இடப்புறம் சீதை எழிலாய் இருந்திட 
மகிழ்ச்சியிலே மணிமகுடம் மின்னிட

வாலிமைந்தன் பொன்வாளும் ஏந்திட 
ஆஞ்சநேயன் அடிமலரிணை தாங்கிட
அருட்பார்வையுமாய் அயோத்திக்கதிபனாய் 
அனைவருக்கும் ராமன் காட்சி தந்தனனே (160)

ஆனந்தம் மேலிட்ட அயோத்தி மக்களும் 
தேனூறும் வாக்குகளால் துதி பாடினரே
சரணம் சரணம் எங்கள் சீதாராமா 
சங்கடங்கள் அகற்றும் கோதண்டராமா

பாபங்கள் தீர்க்கும் ஆனந்தராமா 
பிறவிப்பயன் பெற்றோம் பட்டாபிராமா
தாசரதே சரணம் கோசலைராமா 
தரணி காக்கும் எங்கள் ரகுகுலராமா (168)

மானிட திலகா மறை போற்றும் ராமா 
மங்களம் பொங்குக திங்கள்முக ராமா
ராகவா சரணமய்யா ராமாபிராமா 
ராகவா சரணமய்யா ராமாபிராமா (172)

உத்தர காண்டம் 

கமலக்கண்ணன் ராமன் பட்டாபிராமனாய் 
கற்பரசி சீதையுடன் வீற்றிருந்தனனே 
மாமுனி எழுவர் அகத்தியர் முதலானோர் 
மரகதவண்ணனை காண வந்தனரே

அன்புடன் ஆசிகள் கூறிய அகத்தியர் 
அசகாயசூரனாம் இந்திரஜித் ஒழிந்தான் 
அனைத்துலகிற்கும் நிம்மதி தந்தாய் ராமா 
அற்புதம் அற்புதம் பல்லாண்டு வாழ்க என்றார்(8)

ராவணன் கதை கேட்க ஸ்ரீராமன் விழைய 
இராவணன் புலஸ்திய வம்சத்தினன் என்றார்
கிருதயுகத்தில் திருமாலால் அச்சங்கொண்டு அசுரர் 
பாதாளத்தில் ரசாதலம் சென்று ஒளிந்தனர் 

பதினாயிரம் வருடம் கடினதவம் செய்தே 
மந்தி மாந்தர் ஒழிய மற்றுள்ளோரால் 
மரணமின்மையு மூன்றரைக்கோடி ஆயுளும் 
நினைக்கும் உருவம் எடுக்கும் திறமையும் (16)

வரமாய் பெற்றான் அசுரன் தசமுகன்
வீடணன் தருமநெறி வழுவாமை வேண்டிட 
பிரமனும் மகிழ்ந்தே சிரஞ்சீவி ஆவாய் என்றார்
தேவர்கள் வேண்டுதலால் கலைமகள் நாவில் வர 

தீயவன் கும்பகர்ணன் வேண்டினான் நித்திரத்துவம்
மூவரும் வரங்கள் பெற்றபின் தசமுகன் 
மூதாதையருடன் இலங்கையை கைப்பற்றினான் 
மயனின் புத்திரி மண்டோதரியை மணந்தான் (24)

சீராய் பெற்றான் சக்தி ஆயுதம் ராமா 
போரில் இளவலை மயக்கிதிதுவே 
இளையவர் மூவரும் விவாகிதர் ஆயினர்
இடி போன்ற ஓசையுடன் மேகநாதன் பிறந்தான் 

சோதரன் குபேரனை வென்றவன் விமானம் 
கைப்பற்றி அதிலேறி கைலையில் பறந்தான்
ஓரிடத்தில் புஷ்பகம் நிலைத்து நிற்கவே 
மந்தி முகமுமாய் நந்தி வந்து தடையவே (32)

நகையாடி பெற்றான் சாபம் குலநாசம் குரங்கால் என்றே
அலட்சியமாய் அசுரன் மலை பெயர்க்க முயலவே 
அரனாரும் கால்விரலால் மலையை அழுத்தவே 
அலறினான் கைநெசுங்கி சாமகானம் பாடினான் 

அரைக்கோடி ஆயுளும் ராவண நாமமும் 
சந்திரஹாஸம் எனும் கத்தியும் அரன் ஈந்தார்
திருமாலை வேண்டித்தவம் செய்யும் வேதவதியை 
செருக்குடன் மோகமுமாய் சிகை தொட்டு தீண்டவே (40)

பாபியே உனக்கொரு பெண்ணால் தான் அழிவே 
பாரில் வருவேனோர் உத்தமன் மகளாய் என்றே
தீயில் குதித்தவள் மாய்ந்தனள் அவன் எதிரே 
திரேதாயுகத்தில் வந்தாள் அவள் சீதையாய் ராமா 

ரகுகுல அரசன் அனரண்யன் என்பானை 
இராவணன் வீழ்த்தவே அவனிட்ட சாபம் 
ரகுகுல தோன்றல் ராமனால் திரேதாயுகத்தில் 
ராவணா உனக்கு குலநாசம் என்பதாகும் (48)

சாபங்கள் இம்மூன்றும் பெற்றான் கிருதயுகத்தில் 
சாபம் பலித்ததுன்னால் ராமா திரேதாயுகத்தில் 
ரம்பையை கற்பழித்து மற்றுமொரு சாபம் பெற்றான் 
மங்கையரை வலிந்து தொட்டால் தலை பிளக்கும் என்றே

நிகும்பலையில் யாகம் செய்து மேகநாதன் முறியா வில்லும் 
தாமஸியாம் மாயா சக்தி குறையாத அம்புக்கூடும் 
அற்புத அம்பும் ஆகாயத்தேரும் பெற்றே 
இந்திரனை கட்டி இட்டான் இந்திரஜித் பட்டம் பெற்றான்(56)

வரம் பெற்றான் மீட்க வந்த பிரமனிடம் வருமாறு 
அக்னியை குறித்த யாக முடிவில் தோன்றும் தேரேறின்
அழிவில்லை ஆயின் நாசம் யாகம் நின்று போயின் 
மேகநாதன் வர வலிமை இவை என அறிவாய் 

தசமுகனை வென்றோருண்டோ என ஸ்ரீராமன் கேட்க 
கார்த்தவீரியார்ஜுனனை தேடி வந்த அசுரன் 
ஆயிரங்கையனுடன் போரிட்டு நின்றிட 
கதையினால் நெஞ்சில் தாக்கி கட்டியிட்டான் ராவணனை (64)

புலஸ்தியர் வேண்டுதலால் கட்டவிழ்த்து நண்பனானான் 
வாலியோ தன் கையிடுக்கில் ராவணனை சுமந்தே 
நான்கு திசை கடல்களிலும் நீராடி துதி செய்தே 
கிஷ்கிந்தை வந்தவனை உதறினான் கீழே 

வெட்கி தலை குனிந்து தோழனானான் அசுரன் என்றார் 
அனுமனின் துணையால் அன்றோ ராவணனை கொன்றேன் 
ஆயினும் அவன் வலிமை அறியாததன் காரணத்தை 
அகத்தியரே சொல்வீராக என்று கேட்ட ராமனிடம் (72)

அறியாப்பருவத்தில் ஆதவன் மேல் பாயவே 
அடிஏற்று வீழ்ந்தான் இந்திரனின் ஆயுதத்தால் 
அசைவற்று நின்றான் வாயு மகனை மடியிருத்தி 
அனைவரும் பதறி பின்னர் பிரமனை அணுகவே

அயனாரும் மாருதியை வருடித் தொட்டெழுப்பவே
அனைத்து தேவர்களும் மகிழ்ந்து வரம் அருளினார் 
அறிவும் வலிமையும் நினைக்கும் உருவமும் 
நீண்ட ஆயுளும் பெற்றான் குழந்தையும் (80)

பலவானாய் பர்ணசாலை புகுந்து சேட்டை செய்யவே 
பலமறியாய் யாரேனும் நினைவூட்டும் வரை என்றே 
சபித்தனர் முனிவர் ராமா சாந்தமானான் அனுமனும்
சாபத்தால் தன்பலம் அறியாது நின்றான் என்றார்

அகத்தியர் ராமனிடம் விடைபெற்று செல்லவே 
அனைத்து மன்னர்களும் முறைப்படி பயணமானார் 
வீடண சுக்ரீவரை மகிழ்வுடன் அணைத்து ராமன் 
விடை கொடுக்க பிரியாவிடை பெற்றனர் அவரும் (88)

ராமநாமம் உள்ளவரை வாழ்க நீ என்றே 
ராமனும் அனுமனை அணைத்தாசி வழங்கினான் 
அறவழி பிறழாத ராமனது ஆட்சியில் 
அயோத்தி மக்கள் அனைவரும் மகிழ்ந்தனர்

ஆயின் விதி கண்டது வேறு வழி ராமனுக்கும் 
ஆச்ரமம் செல்வோம் என்ற கர்ப்பவதி ஜானகிக்கும் 
பதியை அகன்று சீதை பரபுருஷன் வீட்டில் வாழ்ந்தாள் 
சதி என ஏற்றான் என்ற பழிச்சொல் வழியே (96)

அறிந்தான் ஸ்ரீராமன் தம்பியிடம் ஆணையிட்டான் 
அபவாதம் வேண்டா உன் அண்ணியை துறப்பதே மேல் 
ஆளரவம் இல்லாத கங்கைக் கரையில் நாளை 
அண்ணியை விட்டுடனே திரும்புவாய் என்றான் 

ஊமையென துயரம் உள்ளடக்கி நதிக்கரையில் 
ஊர்மிளை நாயகன் மைதிலியை தனித்தாக்கி 
தேர் ஏறி பயணமானான் கற்பரசி கலங்கி நின்றாள் 
யாரோரும் இல்லாக்கரையில் அழுதழுது சோர்ந்தாள் (104) 

எல்லாம் அறிபவராம் வால்மீகி முனிவர் கண்டார் 
இல்லாப்பழி சுமந்து தளர்ந்திருக்கும் மண்மகளை 
பரிவுடன் அழைத்தவளை ஆச்ரமம் கொண்டு சென்றே 
துறவிப் பெண்களிடம் ஆதரிக்க கற்பித்தார்

குமுறும் மனதோடு தேரமர்ந்த இளவலிடம் 
துர்வாசரிடமுன் தந்தை வருங்காலம் கேட்க 
மனைவியின் தலை அறுத்த திருமாலை சபித்தார் பிருகு 
மானிடனாய் உலகில் வந்து மனைவியை பிரிவாய் என்றே(112)

ஸ்ரீராமன் ஆவான் அவன் திருமாலின் அவதாரம் 
பலகாலம் ஆள்வான் பல யாகங்கள் செய்வான் 
வெகுகாலம் சீதையை பிரிந்து வாழ்வான் என்றார் 
மாற்றமுடியாதிது விதி என்றான் சுமந்திரன் 

அயோத்தியை அடைந்த லட்சுமணன் அண்ணலிடம் 
அயராது அரசகுல தர்மம் காக்க வேணும் என்றான் 
ஆறுதல் வாக்குகளால் மனம் தெளிந்த ரகுராமன் 
ஆற்றுவோம் நாட்டு மக்கள் தேவைகளை பாங்காய் என்றான்(120)

அதிகாலை வந்தார் பார்கவ முனிவர் அங்கே 
அரக்கன் லவணன் ராமா மதுவின் மகன் இவன் 
அரனிடம் மது பெற்ற சூலத்தின் கர்வத்தினால் 
அனைத்து முனிவர்க்கும் யமனாய்த் தீர்ந்தான் என்றார் 

இளையவன் சத்ருக்னனை மடிமீதிருத்தி அண்ணல்
இவன்தான் லவணனின் நகரத்தின் அரசன் என்றான் 
இப்போதே செல்வாய் கங்கைக்கரை அடைவாய் 
அரக்கன் வெளியில் செல்லும் தருணம் நோக்கி நீயும்(128)

அரண்மனை வாயிலில் போர்க்கோலம் பூண்டு நிற்பாய் 
சூலமெடுக்க உள்ளே விடாதெதிர்ப்பாய் என்றே 
அரியதோர் அம்பும் தந்தே முடி சூட்டி அனுப்பினான் 
இளையவன் கங்கைக் கரையில் வால்மீகி குடிலடைந்தான் 

இரட்டையரைப் பெற்றெடுத்தாள் சீதை அன்றிரவில் 
இது பெரும்பாக்கியம் என சத்ருக்னன் மகிழ்ந்தான் 
அரக்கன் லவணனின் அரண்மனை வாயில் வந்தான் 
அண்ணன் சொற்படி அவனைக் கொன்றரசேற்றான் (136)

ஈராறு வருட முடிவில் அண்ணனைக் காண வந்தான் 
இடையில் வால்மீகியின் ஆச்ரமத்தில் தங்கும் வேளை 
எழில்மிகு ராமசரித கானம் கேட்டு மகிழ்ந்தான் 
இசை மழை பொழிந்தது யாரென்று அதிசயித்தான் 

அகத்தியரைக் கண்டோரிரவு அங்கே இருந்த ராமன் 
அரியதோர் ஆபரணம் பரிசாக பெற்றான் 
அகத்தியருக்கதை ஈந்த சுவேதன் கதையும் மற்றும் 
தண்டகன் நகரம் மண்ணடிந்த கதை அறிந்தான் (144)

ஆசி பெற்று அயோத்தி சேர்ந்த ராமன் தம்பியரிடம் 
ராஜசூய யாகம் செய்யும் ஆசையைக்கூற பரதன் 
ராஜவம்ச நாசம் செய்யும் அந்த யாகம் வேண்டா என்றான்
அச்வமேத யாகம் செய்வீர் மேன்மை என்றான் லட்சுமணன்

சிலை வடிவில் ஜானகியை பத்தினியாக கொண்டே 
தலைமகன் ஸ்ரீராமன் யாகம் செய்ய துவங்கினனே
அரக்கர் வானரர் அடக்கம் அனைத்தரசர் வந்தனர் 
அனைத்து முனி அந்தணரும் யாகசாலை கூடினர் (152)

வால்மீகி சீடருடன் யாகசாலை வந்தடைந்தார் 
பாலகராம் சீடரிவர் ராமகதை பாடி நின்றார் 
இருராமரே போல் நின்ற சிறுவரை கண்ட மக்கள் 
அருமைமிகு கானம் கேட்டு அதிசயித்தும் நின்றனர் 

சிரிக்கும் மலர்கள் என நின்ற இவர் கானம் கேட்டு
பரிசளிக்க முயன்றான் ராமன் பயமின்றி மறுத்தவரும்
பிரியமானால் கேட்க வாரும் யாகசாலையில் நீரும் 
குருவாம் வால்மீகியின் காவ்யமிதை என்று சென்றார்(160)

புனிதம் நிரூபிக்க மண்மகளை நாளை இங்கு 
முனியே கொணர்கென தூதனுப்பினான் ராமன் 
சீதை சபதம் அறிந்த மக்கள் திரளாக கூடினர் 
சீலமிகு வால்மீகி சீதையுமாய் வந்து நின்றார் 

இச்சிறுவர் உன்புதல்வர் லவகுசர் ஆவர் ராமா 
இனி இவள் சபதம் கூறும் கற்பின் மேன்மை என்றார்
நான் என்றும் ராமனையே நினைப்பது உண்மை என்றால் 
தானாக பிளந்து பூமி எனக்கிடம் தரட்டும் என்றாள் 9168)

சபதம் செய்த சீதை முன் பிளந்தது பூமி அங்கு 
வந்ததோர் ஆசனத்தில் மறைந்தாள் கற்பரசி 
அசைவற்று நின்றதெல்லாம் நொடிப்பொழுது ராமன் 
அசைவற்று நின்றான் மனம் சோர்ந்து சினமும் கொண்டான் 

சினங்கொண்டு நின்றவனை தேற்றி பிரம்மதேவரும் 
சீதையை காண்பதினி வைகுண்டத்தில் தான் ராமா
வால்மீகி காவியத்தின் உத்தர பாகத்தையும் 
கேட்பாய் அறிவாய் நீ இனி வரும் காலம் என்றார்(176)

பாடினர் உத்தரகாண்டம் பாலகர் லவகுசர் 
முடிந்தது யாகம் பின்னர் அனைவரும் சென்றனர் 
தானமும் யாகமும் இனியும் பல செய்தான் ராமன் 
பதினாயிரம் வருடம் அயோத்தியில் ஆட்சி செய்தான் 

பரத லக்ஷ்மனரின் புதல்வர் நால்வருக்கும் 
காந்தர்வ காருபத நாடுகளை பிரித்தளித்தான்
பரத லக்ஷ்மணர் என்றும் பக்தியுடன் ஸ்ரீராமன் 
திருவடி தொண்டு செய்து பல காலம் கழிந்தனர் (184)

அயனாரின் தூதனாக யமனாரும் வந்தங்கு 
ராமனிடம் தனிமையிலே உரையாட வேணுமென்றார் 
இடையூறாவோர்க்கு மரணம் விதிக்க வேணுமென்றார் 
இளையவன் லக்ஷ்மணனை ராமன் காவல் வைத்தான் 

திருமாலே திருமகனே மனிதவாழ்க்கை போதுமினி 
திருவுள்ளம் கொண்டு நீரும் வைகுண்டம் எழுந்தருளும் 
இங்ஙனம் யமனாரும் ராமனிடம் உரையாட 
இடையில் துர்வாசர் வந்தார் ராமனைக் காண வேண்டி(192) 

தடை செய்த இளவலிடம் நாட்டை சபிப்பேன் என்றார் 
நாடு காக்க நான் ஒருவன் அழிவது மேல் என்றெண்ணி 
நொடியில் ராமனிடம் முனியின் வரவறிவித்தான் 
சட்டெனவே ஸ்ரீராமன் யமனுக்கு விடை கொடுத்தான் 

கட்டளை என்னவென்று பணிந்து நின்ற ராமனிடம் 
ஆயிரம் வருட தவம் முடிந்திங்கு வந்தேன் ராமா 
பசிக்கு அன்னம் புசிக்க வேணும் தந்தருள்கென்றார் முனி 
வயிறார உண்ட முனி மனம் நிறைய வாழ்த்தி சென்றார்(200)

இனி செய்வதென்ன வென்றே கலங்கி நின்ற ரகுராமன் 
இறுதியில் வாக்கு காக்க இளவலை இழந்து நின்றான் 
தன்னையே இழந்தது போல் தவித்து நின்ற தாசரதி 
தன்னிரு புதல்வர்க்கும் முடி சூட்டி வைத்தான் 

பரலோகம் போகும் எண்ணம் ராமனைக் கவ்வக்கண்டே 
பரதன் உடன் தம்பிக்கு சேதி சேர்க்க விழைந்தான்
விரைவாக தூதர்கள் மதுராபுரி வந்தனர் 
விரிவாக உரைத்தனர் அயோத்தியின் சேதிகளை (208)

தன்னிரு புதல்வர்க்குடன் முடிசூட்டி வைத்தே 
தம்பி சத்ருக்னனும் அயோத்தி வந்தடைந்தான் 
வானரர் கரடி மற்றும் ராக்ஷசர் கூட்டத்துடன் 
நகரவாசிகள் மற்றும் பரத சத்ருக்னர் 

உடன்வருவோம் ஸ்ரீராமா அருள்க என்று வேண்டினர் 
அனுமதித்த ரகுராமன் அழைத்தான் வீடணனை 
வாழ்க இலங்கையில் நீ சிரஞ்சீவியாக என்றான் 
அங்கதனுக்கரசளித்து சுக்ரீவன் பயணமானான் (216)

அழிவில்லை அனுமனுக்கு ராமநாமம் உள்ளவரை
ஜாம்பவான் துவிதன் மைந்தன் வாழ்வார் கலிகாலம் வரை 
மற்றுள்ளோர் வருக என்றே ஸ்ரீராமன் வசிஷ்டரிடம் 
மறைமுறை கர்மம் செய்து பயணிப்போம் என்றான் 

நிறைவோடே ஓங்காரம் உச்சரித்து மௌனமாக 
ஆயுதங்கள் கோதண்டம் மானிட உருவில் வர 
வேதங்கள் மந்திரங்கள் வேதியர் வடிவில் வர 
அந்தபுரமகளிரும் சேடிகளும் பின்தொடர (224)

அயோத்திவாழ் செடிகொடிகள் ஐந்தறிவு பிராணிகளும் 
அனைத்து பூதங்களும் அண்ணலைப் பின் தொடர
இருதம்பியரும் இணைந்து அருகில் நடந்து வர
ரகுகுல திலகன் ராமன் சரயு நதி வந்தான் 

உடன் வந்தோர்க்குரியஇடம் அருளினான் அயன் 
நீராடி உடல் ஒழிந்து அனைவரும் சென்றனர் 
பரதசத்ருக்னர் முறையே சங்குசக்ரமாய் மாற 
பரதகுலத் தோன்றல் ராமன் திருமாலாய் நின்றான்(232)

வருவாய் சீதாராமா திருமாலாய் எழுந்தருள்வாய் 
அருள்வாய் அனைவர்க்கும் மங்கலம் என்றாரயன் 
இனிதே நிறைவுற்றது திரேதாயுக அவதாரம் 
இம்மையின் வெம்மை தீர்க்கும் நித்திய பாராயணம் 

அடிபணிந்தேன் அம்புவில் ஏந்தும் கோதண்டராமா
பாடிய வரிகளிலே பதப்பிழை பொறுப்பாய் ராமா
கோடிஜன்ம புண்ணியமாகும் ராமநாமம் ரகுராமா 
அடியார்க்கினியனே சரணம் சத்குணராமா (240)

ஒர்தாரம் ஒர்சொல்லோர் அம்பென்று வாழ்ந்த ராமா 
தர்மநெறி காத்து வாழ்ந்த தாசரதே ஸ்ரீராமா 
தந்தைதாய் சொல்லேற்று அனுசரித்த சீலா ராமா 
தம்பியரை தனயரென அணைத்து நின்ற ரகுராமா 

அனுமனோடோரிலையில் உண்ட ரகுராமா ராமா 
அனுமனின் நெஞ்சினிலே நிலைத்து நின்ற ராமா ராமா 
அனுமனின் நாவொலிக்கும் என்றும் உன் நாமம் ராமா 
அருள்வாய் என்பதத்தில் ஸ்வரமாய் வருவாய் ராமா (248)

கார்மேகவண்ணா ராமா பார்போற்றும் அயோத்திராமா 
காருண்ய ரூபா ராமா எழில்மிகு சீதாராமா 
தாரக மந்திரமாகும் உன்நாமம் ராமா ராமா 
திருவடி தொழுது நின்றேன் ஸ்ரீபதே சரணம் ராமா 

ராம ராம ராம ஹரே சரணம் சீதாராமா 
ரகுகுல திலகா சரணம் தசரதராமா 
சததமும் என்நாவில் நிற்கவேணும்  ராமநாமம் 
பதமலர் பணிந்தேன் அருள்வாய் ஸ்ரீராமா (256)

                   சுபம் ! சுபம்!!  
     
                                                 
All rights reserved for the poem. Leela Narayanaswamy©