Thursday, January 20, 2011

19. ஒரே ஒரு உள்ளம்

ஒரே ஒரு உள்ளம் ஒன்றிற்பரம் உவமைகள்!
உருகுமென் மனமொரு இறகென்பார் சிலர்
உணர்வுகளின் காற்றில் உள்ளம பறந்ததோ?
உணர்வொன்று உதிர்ந்தங்கோர் இறகாய் வீணதோ?

மனம் ஒரு அடங்காப்பேய் என்பார் சிலர்
மாறாதடிக்கும் உணர்வாம் சுழர்காற்றால்
மனம் தன்வயம் இழந்து அலறுவதாலோ?

மனம் ஒரு குரங்கென்று கூறுவார் சிலர்
குணங்களாம் மரங்களில் மாறிமாறித் தாவும் மனம்
குரங்கு போலென்றால் தவறில்லை அன்றோ?

உள்ளம ஒரு மெழுகு எனும் உவமை ஒரு புதுமை
உணர்வின் வெளிப்பாட்டில் ஓயாதடிபட்டு
உருக்குலையும் மனம் ஒரு மெழுகு போலன்றோ?
உணர்வாம் தீச்சூட்டில் உருகி ஒழுகும் மனம்
ஓடும வழியிலேயே உறையுமோ மெழுகுபோல்?

குயவனின் கையில் சீர்படும் மண் போல
குழைந்தும் உறைந்தும் பதப்படும் நம் மனம்
இன்முகம் காட்ட வழிகாட்டியாய் நிற்கும் மனம்
இன்னலும் இன்பமும் சமநிலையில் ஏற்கும் மனம்
சுமைதாங்கி ஆகும் சுடலையில் மறையும் வரை.












All rights reserved for the poem. Leela Narayanaswamy©

43.மங்களம்அருளிடும்


மங்களம் அருளிடும் நாயகி வரதே
மாதவ சோதரி மாயே

அங்கயற்கண்ணி உன் நாமமதையே
மங்களம் பாடுவோம் என்றும்

சரணம் என்றுனை தொழுது நின்றோமே
சங்கரன் நாயகி தாயே

பொங்குக மங்களம் எங்கும்
தங்குக பேரின்பம் என்றும்

மகிஷாசுர மர்த்தினி மாதவி மாதங்கி
மலைமகள் பார்வதி தாயே

நலம் ஜெயம் அருள்வாய் நீயே
நான்மறை போற்றிடும் தாயே

நலம் சுபம் ஜெயம என்றுமே
நாயகி அருள்வாய் நீயே
நலம் சுபம் ஜெயம என்றுமே
அருள்வாய் தாயே நீயே













All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Sunday, January 16, 2011

42.പലവട്ടം തെളിഞ്ഞല്ലോ ഭഗവാന്‍റെ കാരുണ്യം

പലവട്ടം തെളിഞ്ഞല്ലോ ഭഗവാന്‍റെ കാരുണ്യം
ഫലപ്രതമാണല്ലോ ഭഗവന്നാമ സ്മരണകള്‍
പാവപുണ്യഫലമെന്ന ജീവിത യാത്രയില്‍
ഭാവി എന്തെനറിയാത്ത അന്ധരാനല്ലോ നാം

നാളകെന്നു ചൊല്ലി നെട്ടോട്ടം ഓടിയതില്‍
നല്ലപ്രായം പോയതൊന്നും നമ്മള്‍ ആരും അറിഞ്ഞില്ല
നാല്പതും കഴിഞ്ഞല്ലോ വൃദ്ധവേഷം വന്തല്ലോ
നേട്ടം ഒന്നും ബാകി ഇല്ല നേരെ നില്‍കാന്‍ ശക്തി ഇല്ല
കാലും തളര്ന്തങ്ങു നാലുവശം നോക്കിയപ്പോള്‍
നാലുവട്ടം ഉണ്ടുതീര്ത്ത് കൂട്ടര്‍ എല്ലാം പോയല്ലോ
അറുപതും കഴിഞ്ഞഞ്ഞു ആശ്രയം തേടിയപ്പോള്‍
അനന്തശയന നിന്ടെ കാലൊച്ച കേട്ടല്ലോ












All rights reserved for the poem. Leela Narayanaswamy©










41.ആശ്രുത വത്സല

ആശ്രുത വത്സല ആബത്ബാന്ധവ
അനന്തശയന അഭയം കൃഷ്ണ
അഭയം കൃഷ്ണ

കാഞ്ചനവര്‍ണ നിന്‍ മോഹനരൂപം
കണ്ണില്‍ നിറൈയേണം ഹരേകൃഷ്ണ
ഹരേകൃഷ്ണ

സരസീജനാഭ നീരജനയന
ദ്വാരകാപതെ ശ്രീ ഹരേകൃഷ്ണ
ശീരസാഗര സയന ശ്രീപതെ
ക്ഷണം കണ്‍ മുന്നില്‍ വരേണം കൃഷ്ബ
വരേണം കൃഷ്ണ

വേദസ്വരൂപ വേങ്കടെസ വരത
വേണുഗോപാല തൊഴുന്നേന്‍ കൃഷ്ണ
പുരന്തരവിട്ടല ബ്രുന്താവനവാസ
നരഹരി ദേവ ഹരേ നാരായണ
ഹരേ നാരായണ











All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Saturday, January 15, 2011

40.മങ്കൊമ്പില്‍ അമ്മെ മംഗളദായിനീ


മങ്കൊമ്പില്‍ അമ്മെ മംഗളദായിനീ
ഗംഗാധരന്‍ദേവീ കൈതൊഴുന്നേന്‍

ദുഷ്ടനിഗ്രഹേ ദുര്‍ഗ്ഗേ ഭഗവതീ
ഇഷ്ടപ്രതായിനീ കൈതൊഴുന്നേന്‍

താനവനാശിനീ ധര്മസംവര്‍ധിനീ
കാനനദുര്‍ഗ്ഗേ കനിയേണമേ

വട്ടകശൂലം വഹിക്കും മഹേശ്വരീ
കഷ്ടങ്ങള്‍ അകലുവാന്‍ കനിയെനമേ

ജഗത്ജനനീ അമ്മെ സത്ഗുണകാരികെ
ജഗത്രക്ഷകീ അമ്മെ കൈതൊഴുന്നേന്‍













All rights reserved for the poem. Leela Narayanaswamy©

கண்ணனின் அவதாரக் கதை



காப்பு

வியாசனுக்குத் துணை போன விநாயகா
அடியன் விரலில் வந்தமர்ந்தே நீ அருள்வாய்
அநீதி தலை தூக்கும் காலத்தில் நான்
அவதரிப்பேன் என்று சொன்ன அரியின் கதையை

துவாபரயுகத்திலே கண்ணன் கதையை
கோர்வையாய் தூரிகையால் வரைத்திடவே
அரங்கன் மருகனே ஆனைமுகனே ஐயா
இரங்கி அருள்வாய் ஈசன் மகனே

வேறு

அரியின் நாமம் தரும் அளவில்லா புண்ணியமே
சேர்ந்து பாடுவோம் கார்வண்ணன் கதையையே
ஓரிடத்தில் பிறந்து வேறிடத்தில் வளர்ந்தோ
ராயிரம் அற்புதம் நிகழ்த்திய பாலனாம்

குறும்பனாம் இடையனாம் கோபச்சிறுவனாம்
குறுஞ்சிரியாலே மனமயக்கும் கள்வனின்
காவியம் இங்கே தாளத்தில் பாடுவோம்
கரைகாணாதவன் கருணை மழையென பொழியவே

1. கண்ணன் பிறந்தான்

உக்ரசேனனாம் மதுரா அரசனின்
வக்ரசிந்தையுள்ள புத்ரன் கம்சன்
தங்கை தேவகி மகன் தனக்கெமன் என்றறிந்தே
தன்னிலை தவறியே ஊழ்வினைப்பயனால்

அசுரகுணம் மேலோங்கி நின்றனனே அஹோ
அனைவரையும் சிறையில் அடைத்தனனே
தேவகி மழலைகள் ஆறினையும் கம்சன்
கூசாமல் கொன்றனன் பாறையில் எறிந்தே

ஏழாம் கருவாய் ஆதிசேடன் வரவே
இடம் மாற்றினாள் மாயை உன் ஏவலாலே
அரவங்கட்கரசனாம் ஆதிசேடன் அங்கே
பிறந்தான் கோகுலத்தில் ரோகிணி மகனாய்

கருவும் கலைந்ததென்று தேவகி கூறவே
காவலர் கம்சனை அறிவித்தனரே
எட்டாவதாய் பிறக்கும் மழலை தன்கையில்
கிட்டாமல் போகுமென அவன் அறிந்திலனே

கம்சனுக்கெமனாக நீ கொடுஞ்சிறையில்
தேய்பிறையில் நாலிரண்டு திதியினிலே
திருநாளாம் ரோகிணியில் திருமகனே
கருநீல மேனியனாய் குழவியாக

நல்லொளியாய் நள்ளிரவில் ஆவணியில்
வசுதேவர் தேவகிக்குப் பிறந்தனையே
யதுகுலம் காக்கவந்த காவலனே ஐயா
புதுமலராம் உன்னைத் தந்தை வசுதேவன்

தன்தலையில் கூடையிலே சுமந்தனனே
தாள்களும் நீங்கிச்சிறை திறந்திடவே
தயங்காமல் யமுனைக்கரை அடைந்தனனே
முடிவிரித்து ஆதிசேஷன் குடையாயினனே

முடியில் அவன் ரத்தினங்கள் ஒளிவீசிடவே
தேய்பிறையின் இருளங்கு விலகிடவே
பெருமழை யமுனையிவை அளவில் ஒதுங்கவே
கருணையின் வடிவமே உன்னருளாலே

கடந்தனன் யமுனையை வெகுவிரைவினிலே
அடைந்தனன் நந்தகோபன் இல்லத்தினிலே
யோகநித்திரையாம் மாயையும் அங்கே
யசோதைக்கு மகளாய் பிறந்திருந்தனளே

இருசெவி அறியாமல் குழவியை மாற்றியே
இருப்பிடம் சேர்ந்தனன் வசுதேவனுமே
மாயையின் அழுகுரல் சிறையில் கேட்கவே
காவலர் கம்சனை அழைத்து வந்தனரே

பிறந்தது பெண்ணாயின் எனக்கென்ன
இறப்பது நிச்சயம் அவளென் கையால்
என்றே கம்சன் கர்வமாய் ஒருகையால்
பறித்து எறிந்தனன் பாறையில் மழலையை

மாயக்குழந்தையோ பறந்தனள் மேலே
வானில் எண்கையளாய் வளர்ந்து நின்றனளே
கம்சா உந்தன் நாசம் நிச்சயமே உன்
காலன் வேறிடத்தில் பத்திரமே

செய்வது தீவினை என்றறிகிலையே
செவ்வனே யோசிப்பாய் அறிவிலியே
என்று கூறிச் சிரித்தவள் மறுகணம்
சென்று மறைந்தனள் விண்ணிடையே

கதிகலங்கி நின்றான் கம்சனாம் அசுரன்
சதிபல தீட்டினான் இதர அசுரருடன்
கொன்று குவித்தனர் குழவிகள் பலரையும்
கோகுலம் வந்தனர் உன்னைத்தேடி

2. கண்ணன் கோகுலத்தில்

கோகுலத்தில் அன்னை யசோதை மகிழ்ந்தனள்
குமாரா குழந்தையாம் உன்முகம் கண்டே
கண்ணின்மணியே கண்ணா என்றழைத்தே
தன்னோடு சேர்த்து உன்னை உச்சிமுகர்ந்த்னள்

பாலூட்டி சீராட்டி வளர்த்தாள் அன்னையுமே
பலகாலம் தவம் செய்த புண்ணியமே
மகிழ்ந்தாள் ரோகிணி மகனை அணைத்து
முகமலர்ந்தான் நந்தன் உங்களிருவரைக்கண்டு

முதல் முயற்சியாய் தாய்மாமன் கம்சன்
முலையூட்ட பூதனையை அனுப்பி வைத்தனனே
உருமாறி வந்தவள் உன்னை மடியில் வைத்தே
உரிமையுடன் பாலூட்டத் தொடங்கினளே

உண்மை அறிகின்ற மாயனே நீ அவள்
உயிரையும் சேர்த்தங்கு உறிஞ்சினையே
மலையென வீழ்ந்தவள் மாய்ந்தனளே அவள்
மார்பில் குழந்தை நீ விளையாடினையே

அன்று தொடங்கி பல அசுரர்களை அய்யா
கொன்று குவித்தாய் நீ விளையாட்டாய்
ஒருவயதில் உனைக் கொல்ல வந்த சகடாசுரன்
உருண்டோடி வந்தான் வண்டிச்சக்கரமாய்

உதைத்தே கொன்றாய் உன் பிஞ்சுக்காலால்
பதைத்து விம்மினர் அன்னைதந்தையர்
சுழற்காற்றாய் வந்த த்ருணாவர்த்தனும்
புழுதியை எழுப்பி உனைக் கவர்ந்தனனே

பெருஞ்சுமையாக ஆகி நீ அவனை
பெரும்பாறையில் வீழ்த்திக் கொன்றனையே
பீதி அடைந்தனர் பெற்றோர் ஐயா நீ
ஏதுமறியாதவனாய்ச் சிரித்தனையே

பாலகர் இருவர்க்கும் பெயர் சூட்டினரே
பலராமன் கிருஷ்ணன் என அழைத்தனரே
அரிய குழந்தை இவன் அல்லல் தீர்ப்பான் என
அருளினரே கர்க்கமுனிவரும் மகிழ்ந்தே

தவழ்ந்தும் எழுந்தும் தவறி விழுந்தும்
கவர்ந்தனை பெரிதாய் அன்னை மனதினை
நடைப்பருவத்தில் இடையச்சிறுவரோடு
திருடித்தின்றாய் நீ வெண்ணையும் தயிரும்

மண்தின்ற உனனைக் கண்டித்த அன்னைக்கு
காண்பித்தாய் மூவுலகும் உன் வாயினுள்ளே
தயிர்க்குடம் உடைத்து உரலில் கட்டுண்டாய்
கயிறல்ல அன்பால் அன்னையுனைப்பிணைத்தாள்

உரலுடனே தாமோதரனாய் மருத
மரங்கள் இரண்டிடையில் தவழ்ந்தனையே
வேரற்று வீழ்ந்தன இருமரங்களுமே
பெருஞ்சாபம் நீங்கினர் நளகூபுராதியரே

அரிநீ என்றறியா இடையகுலத்தவர்
அசுபநிகழ்ச்சிகளால் அதிர்ந்து போயினரே
கோகுலம் அகன்று பிருந்தாவனத்திலே
குடிமாற்றம் செய்ய எண்ணினான் நந்தனே

3. கன்று மேய்க்கும் கண்ணன்

கன்றுகள் மேய்த்திடும் இடையச்சிறுவனாய்
காடு முழுதும் நீ நடந்து சென்றாயே
யமுனைக்கரையும் கோவர்த்தனமலையும்
பெருமை அடைந்தனவுன் திருவடியாலே

துளசிவனமும் ஆவினங்களுமுன்
வேய்ங்குழல் நாதத்தில் மயங்கி நின்றனவே
கன்றாய் வந்தனன் அசுரனொருவன்
கொன்றெறிந்தாயே பெருமரம் மீதே

அலகால் கிழிக்கவந்தான் பகனாம் அசுரன்
அலகுபிளந்தவன் கதை முடித்தாயே
மலைப்பாம்பாய் வந்த அகனின் வாயில்
மாடுகன்றிடையரிவர் அகப்பட்டனரே

வாயினுள் சென்றாய் அவரைத்தொடர்ந்து நீ
வடிவைப்பெரிதாக்கி கழுத்து பிளந்தாய்
இடையச்சிறுவரோடிணைந்து நடந்தே
பாசமுடன் நண்பரின் பயம் போக்கினையே

புல்லாங்குழலூதி மகிழ்வித்தவரோடு
உல்லாசமாய் ஒத்து விருந்துண்டனையே
கன்றுசிறுவரை மறைத்திட்ட அயனின்
கர்வம் களைந்திட கண்ணா நீ நினைத்தனை

சிறுவர் கன்றுகள் கொம்புகளிவையாய்
பல்வேறு உருவில் ஓராண்டு கழித்தனை
உற்றார் உறவினர் ஒருவரும் அறிந்திலர்
செருக்கொழிந்த பிரமன் திருவடிதொழுதான்

மாயக்கன்றிடையரை மறைத்தருளிய நீ
அயனிடம் பெற்றாய் உ ன் கன்றிடையரை
ஆறு வயதும் முடிந்தது கண்ணா நீ
ஆவினங்களை மேய்க்கத்தொடங்கினை

பலராமனுமாய் காட்டில் திரிந்த நீ
தேனுகாசுரனின் பனங்காட்டில் நுழைந்தனை
பனைமரம் குலுக்கவே தேனுகன் எதிர்க்கவே
பலராமன் அவனை கொன்றொழித்தனனே

நரிகளாய் வந்தனர் மற்றும் அசுரர்கள்
நந்தகுமாரா நீ கொன்று வென்றனையே 
குழலூதிக் களித்திடும் கோகுலபாலனே
கோபகுமாரருமாய் சுற்றித்திரிந்தனையே 

4. காளியன் மேல் நடனம்

நீரில் கலந்து வந்த காளியனின் நஞ்சால்
நிலத்தில் விழுந்தனர் இடையராவினம்
கருணையின் வடிவமே கமலக்கண்ணா நீ
காளியனை எதிர்த்து காக்க விழைந்தனை

மரத்தின் மீதேறி குதித்தனை நதியில்
அடியில் போய் நின்றனை காளியன் எதிரில்
பாலனென்று கருதிய பாம்பும் உன்னை
வாலால் பிணைத்து இறுக்கிப் பிடித்தது

சேதி அறிந்தனர் நந்தன் முதலானோர்
பதறி வந்தனர் நதிக்கரை அருகே
விளையாட்டாகவே விடுபட்டு நின்ற நீ
களியாடத்தொடங்கினாய் வாலைப்பிடித்து

மதியற்ற காளியனின் முடிமேல் நின்றே
நதியின் மேல்தட்டில் வந்தனை எளிதாய்
பதித்தாய் பாதங்களை அழுத்தி முடிமேல்
ததிகிண தாளத்தில் நடமாடி நின்றாய்

ஆடினாய் கண்ணா நீ முடிகள் முறியவே
அனைவரும் அதுகண்டு சிலையென நிற்கவே
தாளம் தவறாமல் தவறி விழாமல் நீ
தளிர்பாதம் பதித்து தளராமல் ஆடினாய்

முடிகள் ஒடிந்தவன் கண்கள் செருகின
அடிபணிந்தனர் காளியன் மனைவியர்
மாங்கல்யம் காத்திட மன்றாடினரவர்
மண்டியிட்டான் உன்முன் காளியன் முடிவில்

கடல் நடுவில் ரமணத்தீவு செல்கென
கட்டளை இட்டனை அன்புடனே நீ
வாரான் உன்னிடம் கருடனும் அங்கே
வாழ்வாய் இன்பமாய் இல்லறம் என்றாய்

அரவம் சென்றது அமுதமானது நீர்
அருட்பார்வை ஒன்றை வீசினாய் கண்ணா
இறந்த பசுஇடையர் உயிர்த்தெழுந்தனரே
சுற்றம் சூழ்ந்துனை உச்சிமுகர்ந்தனரே

5. கண்ணன் எங்கள் தலைவன்

எத்தனை அசுரர்கள் உன்முன் வந்தனர்
அத்தனைபேரையும் அழித்தனையே நீ
இதா ஓரசுரன் இடையனாய் வந்தே
தமையனைக் கடத்தினான் தந்திரமாக

கைமுட்டி கொண்டே அசுரனை அழித்த
அண்ணனைத் தழுவினாய் களிப்புடனே நீ
வேனல் தீயையும் வேகமாய் விழுங்கினை
புன்னகையுடனே சுற்றித் திரிந்தனை

விந்தை இதுவென வியந்தனர் சிறுவர்
சின்னஞ்சிறுவனே உன்செயல் கண்டே
வீரன் என்றுனைப் புகழ்ந்து போற்றினர்
விருப்பமுடனுன்னைத் தலைவனாய் ஏற்றனர்

அடையாளமாய் ஒரு கிரீடம் சூடவே
ஆவலாய் காட்டில் உரியன தேடினர்
இடையரும் மகிழ்ந்துன் முடியில் சூடினர்
கிரீடமாய் ஒரு மயிலிறகினையே

மயிலிறகுன் தலையில் ஒயிலாய்ச் சிரித்தது
மயிலும் தோகைவிரித்தாடி மகிழ்ந்தது
அழகே அற்புதமே அஞ்சனவண்ணனே
குழலூதி கோபியரின் மனம் நிறைந்தவனே

குழைந்து போயின கோபியர் உள்ளம்
அமுதமாம் முரளி நாதத்தில் நனைந்தே
ஆடையை ஒளித்தே வேடிக்கை செய்தே
அடைக்கலம் கொடுத்தனை கோபியர்க்கெல்லாம்

6. கண்ணன் கோவிந்தனாய்

இந்திரன் செருக்கினை அடக்க நினைத்தனை
ஆவன செய்ய முயற்சியில் இறங்கினை
வேள்வி ஏற்கும் தகுதி யாருக்கென்ற
வாதத்தில் நந்தனை மாற்ற நினைத்தனை

மலையன்றோ நீர்மேகங்கள் தடைவது
மாந்தரின் நற்குணமே மழையாய் பொழியுது
வந்திப்போம் அந்தணரை பலியும் மலைக்கே
இந்திரனுக்கிதில் பங்கில்லை என்றே

நந்தனை போதித்தாய் தந்திரமாகவே
நடந்தது வேள்வி கோவர்த்தன மலைக்கே
ஆத்திரம் கண்ணை மறைத்திட இந்திரன்
ஆகாய வீதியில் ஊழியை ஏவினான்

பெருமழை அங்கு பேரிடியுடன் தொடங்கிட
பெரும்பீதி கொண்டே மக்கள் அலறினர்
சிறுவிரல் கொண்டு நீ பெருமலை தூக்கினை
குடையாய் நின்றது கோவர்த்தனகிரி

குடைகீழ் வந்தனர் கோகுல வாசிகள்
தடையின்றி தத்தம் இருக்கை அமர்ந்தனர்
தளராமல் பெய்தது ஏழுநாள் மழை
தளரவில்லை நீ கருவிழிக்கண்ணா

அஞ்சினான் இந்திரன் அரிநீ என்றுணர்ந்தான்
மணிமுடி நிலம் தொட திருவடி தொழுதான்
மழையும் நின்றது கிரி நிலம் பதிந்தது
மணிவண்ணா நீயும் தன் இயல்பானாய்

காமதேனு பால்நீராட்ட இந்திரன்
நாவினால் துதிசெய்தான் கோவிந்தா என்றே
மலையைக் குடை பிடித்து கிரிதரன் ஆனாய்
மகிழ்ந்துனைத் தழுவினர் உற்றார் உறவினர்

உபசரிக்க விழைந்தான் வருணன் உன்னை
ஒளித்தான் உந்தையை யமுனைக்கடியில்
அறிந்தாய் சென்றாய் கண்டு கொண்டு மீண்டாய்
உணர்ந்தான் நந்தன் தன்மகன் அரிஎன்றே

7. கோபியரும் கண்ணனும்


அரிய தவமிருந்தும் உரிய தானம் செய்தும்
அடையக்கிடையாத பேரின்பநிலை
அடைந்தனர் கோகுலமகளிர் இனிதே
இடையறாதுனை நினைத்த தவப்பயன் அதுவே

வேய்ங்குழல் ஊதியே யமுனைக்கரையிலே
வேட்கையாய் வெண்ணிலா கண்டு களிக்கவே
மான்விழியினரை தேனூறும் இசையினால்
மயக்கியவர் மனம் மதமுறச்செய்தனை

கோபியரின் பாட்டு

ஆடிவா கண்ணா என்னை அணைக்க வா கண்ணா நீ
பாடிவா கண்ணா எங்கள் பக்கல் வா கண்ணா 
கூடவா கண்ணா நீ குழைந்து வா கண்ணா
கோடிஜன்ம பாபம் தீர்க்கும் புண்யமே கண்ணா

பிஞ்சுக்கையால் கொஞ்சிடவா அஞ்சனவண்ணா
பஞ்சுக்கன்னம் பதித்திடவா பவளவாயா நீ 
குழலிசை பொழிவாய் நீ மழலைக்கண்ணா
கோபியர் மனம் குளிர கோகுலபாலா

அனைத்தும் மறந்தோமுனை அணைக்கையிலே கண்ணா
அறுவதை உணர்ந்தோம் பிற பிணைப்புகளே
மாயக்கண்ணா மனம் கவர்ந்த கள்வா வா
என்றும் உன்னருகே எமக்கிடம் நீ தா

ஆயர்குடியின் செல்வா எமை அடிமைகொள்ள வா
பாயும் மனக்கடலில் படகென நீ வா 
ஆதாரம் நீயே ஆருயிரே கண்ணா 
ஸ்ரீதரா மாதவா கோவிந்தா வா வா


முத்தான உன்னைத்தான் முத்தாட விழைந்தே
பித்தமேறினரே கோகுல கோபியர்
இடைவிடாதுனைத்தேடி பாடி அழைத்தனர்
இடையாடை நழுவிட உனைத் தழுவினர்

அழிவிலா உனையடைய சீராக முனைந்தாலே
நழுவிடும் இடைவரும் இன்னல்கள் என்றே
பற்றற்ற நிலையின் பேரின்ப ஊற்றினை
பாவையர் வழி நீ உலகுக்குணர்த்தினை 

ஒரு கோபிக்கொரு கண்ணன் என்றே நீ
திருஉரு பல எடுத்து ஆடிப்பாடினையே
நடனமாடினாய் நீ இடையச்சிறுவனே
இடபவாகனனும் தன்வயம் இழந்தே

இடையப்பெண்ணாய் வேடம் மாறி வந்தனனே
தடையிலாதுன்னோடு சேர்ந்தாடினனே
கீதம் பாடினாய் ராதையோடொத்து நீ
கோதையவள் எய்தினாள் யோகநிலை அன்று

ஏகாந்த சிந்தையுடன் மோகாந்தர நிலையில்
ஏந்திழை ராதையுன் மனதில் நிறைந்தனள்
யாதவதிலகா யாதும் துறந்த நிலை
மாதவப் பயனன்றோ இந்த உயர்நிலை

8. கண்ணன் பாலகுமாரனாய்

நந்தகோபனை விழுங்கிய பாம்பினை
விந்தையாகவே காலால் தொட்டனை
அருட்கடலே உன் திருவடித்துகளால்
அரவம் தன்தீவினைப் பயன் அறுந்தது

சங்கசூடனைக் கொன்றவன் ரத்தினம்
பாங்காய் கொடுத்தனை பலராமனிடம்
காளையாய் வந்த அரிஷ்டனைஅழித்தாய்
பரியாய் வந்த கேசியைக் கொன்றாய்

ஆவினங்களைக் குகையில் பூட்டிய
வ்யோமனைக் கொன்றாய் கேசவா நீயே
கொடிய அசுரர் பலர் மாண்டனர் உன்னால்
இடையர்குலம் காக்க நின்றாய் நீ முன்னால்

9. கண்ணன் மதுராவில்


மதுராவில் பெற்றோரைச் சிறையிலடைத்தும்
மற்று சூழ்ச்சி பல செய்தும் பலனின்றி
தன்விதி நொந்தே மதி இழந்தான் கம்சன்
உக்தி ஒன்று புதிதாய் மனதில் கண்டான்

வீரப்போர் விழா என்றும் வில்வேள்வி என்றும்
விரைவாய் நீயும் மதுரா வருகவென்றும
அனுப்பினான் சேதி ஒன்று அக்ரூரன் வழியே
அழைத்துனை மதுராவில் அழித்திடவே

அறிவிலி பறித்த குழியில் அவனே வீழ்வான்
அற்பன் தன் அழிவின்அழி தானே திறந்தான்
உன்னைக்காண வரும் உவகை பொங்கிட
உடன் புறப்பட்டான் அக்ரூரன் தேரில்

பிருந்தாவனமுழுதும் எதிரொலித்ததுன் நாமம்
தன்வயம் இழந்து நின்ற கோபகோபியரால்
வியந்து போனான் யதுகுலன் அக்ரூரன்
வந்து சேர்ந்தான் நந்தகோபன் இல்லம்

இனிதே உரையாடி மகிழ்ந்த அக்ரூரன்
பணிவாய்க் கூறினான் பயணத்தின் நோக்கம்
பிரிய மனமின்றி வருந்திய உற்றாரை
உரிய சொற்களால் அமைதிப்படுத்தினை

பிரியா விடைபெற்றே பின்னிரவில் நீ
பயணித்தாய் நந்தனும் பலராமனுமாய்
நண்பன் ஸ்ரீதாமன் என்றிவர் தொடரவே
நண்பகல் அடைந்தாய் மதுரா நகரே

மதுரமாம் உன்கதை அறிந்திருந்த மக்கள்
மாறாத வியப்புமாய் உனைக்கண்டு நின்றனர்
அருளினாய் சந்தனம் தந்த கூனிக்கே
அடைந்தாய் கோபுரம் சந்தனம் பூசியே

விழாகோலம் பூண்ட வேள்விச்சாலையிலே
வில்லை நாணேற்றி முறித்தாய் கண்ணா
பேரிகை போன்றதோர் பேரொலி எழுந்தது
பேரிடி கொண்டவனாய் கலங்கினான் கம்சன் 

மற்போர் மறுநாள் என்றறிந்தே நீ
மற்றுள்ளோருடன் களவாயில் அடைந்தனை
ஏவினான் பாகன் குவலயபீடத்தை
பாவம் யானையும் பற்றியது உன்னை

வதைத்ததன்தந்தம் தோளில் சுமந்தே
தமையனோடொத்து நீ களத்தில் நுழைந்தாய்
சிறுவர்க்கல்ல மற்போர் என்றனர் மக்கள்
இறந்தான் சாணூரன் சிறுவனுன் கையால்

ஆத்திரத்துடனுன் உற்றாரைக் கொல்கென
ஆணையிட்ட கம்சன் அரியணையில் பாய்ந்தாய்
அச்சங்கொண்டென்றுமுனை மறவாத கம்சனும்
அழிந்தனன் ஆயினும் நற்கதி அடைந்தான்

கம்சனின் இளையவர் எண்வரின் கதையையும்
கண்ணா நீ முடித்தாய் அண்ணனோடொத்து
பெற்றோடோடவர் பெற்றோரையும் மீட்டே
பெருமையுடன் அரசுரிமை ஏற்கச்செய்தாய் 

உத்தமன் என்றுனை வாழ்த்தினர் மக்கள்
உத்தவன் உந்தன் உற்றவன் ஆனான்
அனைத்துமறிவாய் எனினும் மானிடனாய்
அண்ணனோடொத்து நீ கல்வி பல கற்றாய்

இறந்த புதல்வனை மீட்டுக்கொடுத்தே
இனிதே குருவிற்கு காணிக்கை அளித்தாய்
நாட்கள் நகர்ந்தன யதுகுலம் தழைத்தது
நலிந்தனர் கோபியர் பிரிவாற்றாமையால்

உத்தவன் தூதனாய் சென்றனன் கோகுலம்
உவகை அடைந்தனர் கோபகோபியர்
கம்சனை வெற்றிகொண்ட கதை அறிந்தனர்
கரைகாணா இன்பம் அடைந்தனர் இடையர்

10. கண்ணன் அரசகுமாரனாய் துவாரகையில்


சைலேந்த்ரியின் அன்புக்கு அடிமையானாய்
சுந்தரி அவளும் உன்னோடொன்றினாள்
மருமகன் இழப்பால் சினந்த ஜராசந்தன்
பொருதினான் உன்னோடு பதினெண்முறைகள்

வெற்றியைக் கொடுத்தாய் தந்திரமாகவே
வேறொருமுறையில் கொன்று வெல்லவே
கடலின் நடுவில் துவாரகை படைத்தாய்
மறைத்தாய் மக்களை அங்குன் திறமையால்

அண்ணன் மணந்தான் ரேவதி என்பாளை
ஆவலாய் யாதவரும் கூடி மகிழ்ந்தனர்
விதர்ப்ப அரசன் மகள் ருக்மிணி உனக்கு
விளக்க விழைந்தாள் தன்காதல் வேட்கையை

தூதனாய் வந்த அந்தணன் உன்னிடம்
மீதமற உரைத்தான் ருக்மிணியின் நிலை
தமையன் ருக்மியின் நண்பன் சிசுபாலன்
தாமதியாது என்னை மணக்க உள்ளான் 

இனியும் எனை நீ புரிந்துகொள்ள விலையெனில்
இனி தாமதியேன் உடன் உயிர்பிரிவேன்
என்ற சேதியை அறிந்ததும் தேரில் நீ
அன்றே அடைந்தாய் குண்டினபுரத்தை

படையுடன் பலராமன் பின்தொடர்ந்திடவே
பரிவுடன் ஏற்றினாய் ருக்மிணியை தேரில்
பாய்ந்துசென்ற உன் தேரினைக் கண்டே
பகைவர் கூட்டம் எதிர்த்து நின்றதுவே

போரிட்ட ருக்மியை கொல்லாமல் விட்டாய்
செருக்கொழித்தாய் அவன் சிகையை அறுத்தே
மணந்தாய் ருக்மிணியை துவாரகை வந்தாய்
மாதவா மனமொத்து இனிதே வாழ்ந்தாய்

ஆற்றல பொருந்திய ச்யமந்தகமணியை
ஆதவனிடம் பெற்றான் சத்யஜித் என்பான்
அணிந்து வனம சென்ற அவ்னிளையோனை
அறியாமையாலே கொன்றதோர் சிங்கம்

சிங்கத்தைக்கொன்றந்த ச்யமந்தகமணியை
கொடுத்தான் மகளிடம் அன்புடன் ஜாம்பவான்
பழிசுமந்தாய் நீ மணிதேடி வந்தாய்
கிழவன் ஜாம்பவானை எதிர்த்து நின்றாய்

மாலவன் நீ என்ற உண்மை உணர்ந்தே
மணியோடு மகளையும் உனக்கே கொடுத்தனன்
உணர்ந்தான் தவறை சத்ரஜித்தும் உடன்
உனக்கே அளித்தான் மகளோடு மணியையும்

ஏற்றாய் நீ கண்ணா சத்யபாமையை
ஏற்கவில்லை நீ சயமந்தகமணியை
சத்யஜித்தைக் கொன்ற சததன்யனை அழித்தே
சத்தியபாமையின் மனம் குளிர்வித்தாய்

பாண்டவர்க்குற்றவன் ஆனாய் கண்ணா
பார்த்தனைப் பிரியாமல் தோழமை தந்தாய்
பார்த்தன் விரும்பினான் தங்கை சுபத்ரையை
பலராமன் அறியாமல் அவர்மணமுடித்தாய்

மித்ரவிந்தை காளிந்தியை மணந்தாய் கண்ணா
பத்ரையும் உனக்கே பத்தினி ஆனாள்
காளைகள் எழினை ஏழுருவெடுத்தே
கட்டினாய் நொடியில் மணந்தாய் ஸத்ரையை

மீன் இலச்சினையை குறிதவறாதடித்தாய்
மீன்விழி லக்ஷ்மணையுன் பத்தினி ஆனாள்
கருடன் மீதேறி சத்யபாமையுமாய்
நரகனை அழித்தாய் சக்ராயுதத்தால்

கடல்நடுவில் வந்த ஐந்தலை அசுரன்
முரன் கதை முடித்தாய் நீ முராரி ஆனாய்
சிறை மீட்டாய் பதினாயிரம் பெண்டிரை
குறையில்லாமல் ஆட்கொண்டாய் அவரை

கொடுத்தாய் குண்டலம் அதிதிக்கு நீ
கொணர்ந்தாய் கற்பகமரம் வானுலகினின்றே
உன்மகன் பிரத்யும்னன் கவர்ந்து மணந்தான்
தன் தாய்மாமன் ருக்மியின் மகளை

அவன் மகன் அனிருத்தனைக் கனாக்கண்டாள்
ஆயிரங்கையனாம் பாணன் மகள் உஷை
அறிவுடை தோழி சித்ரலேகை அவனை
இரவில் அவளிடம் கொண்டுவந்தனளே

அறிந்தான் பாணன் கட்டியிட்டான் அவனை
அறிந்து நீ சென்றாய் படையுடன் அங்கே
அரனார் முருகனிவர் முயற்சி விரயமாயின
விரைந்தடிபணிந்தான் பாணாசுரனும்

தானே அரிஎன்று தற்புகழ்ந்த பவுண்ட்ரீகன்
தலையறுந்தான் அவன் படையும் அழிந்தன
தோழன் காசிமன்னன் தலையும் நீ அறுத்திட
அவன்மகன் ஏவினான் ஆபிசார அக்னியை

ஓங்கியுயர்ந்து வந்த தீப்பிழம்பினெதிரே
ஒளிமிக்க காலச்சக்ரமதை ஏவினாய்
அஞ்சித் திரும்பிய அக்னியும் சினத்துடன்
அழித்து அடங்கியது ஏவியோனை எரித்தே

11. பாண்டவரும் கண்ணனும்


இளையதலைமுறையைக் காவலர்களாய்
இனிதே வைத்தாய் நீ துவாரகாபுரியில்
அந்தப்புர மகளிரும் யாதவரும் சூழ
அடைந்தாய் கண்ணா ஸமந்தபஞ்சகம்

பாண்டவர் கௌரவர் நண்பர்களுடன் நீ
கொண்டாடி அங்கே புனிதநீராடினாய்
உசிதமாய் செய்தனன் வேள்வியை வசுதேவன்
உபசரித்தாய் நீ இடையரை அழைத்தே

மூன்று முப்பது நாட்கள் இடையருடன்
முகுந்தா குறையாமல் ஆனந்தம் நுகர்ந்தாய்
பாண்டவரில் மூத்தோன் நடத்திய வேள்வியில்
பங்கேற்க நீ இந்திரப்ரஸ்தம் சென்றாய்

தன்பின்னோர் ஆகும் வீமன் பார்த்தனுடன்
அனுப்பினான் உன்னையும் ஜராசந்தனிடம்
மூவரும் சென்றீர் அந்தண வேடத்தில்
ஆவலாய் அவனைப் போருக்கு அழைத்தீர் 

குறிப்பறிந்தான் உன் கிழித்தவனை இரண்டாய்
எறிந்தான் வீமன் இடவலமாற்றியே
அடைபட்ட சிறையில் அல்லலுற்ற அரசரை
விடைகொடுத்தனுப்பினை விடுதலை செய்தே

ஐயமொன்று எழுந்தது கேள்வியாய் வேள்வியில்
முதல்மரியாதை யாருக்கு என்றே
பக்குவமாய்ச் சொன்னான் பாண்டவரிளையோன்
பதவியின் தகுதி உனக்குரியதென்றே

சினந்த சிசுபாலன் இழிந்துரைத்தானுன்னை
சிரமறுத்தவன் கதை முடித்தாய் சக்ரத்தால்
அரசனின் வேள்வி இனிதே முடிந்தது
அனைவரும் தருமனை வாழ்த்திச் சென்றனர்

நீரும் நிலமும் திரிவறியாமையால்
நிலை தடுமாறினான் அவையில் துரியோதனன்
சிரித்தனள் த்ரௌபதி அதுகண்டு இயல்பாய்
சிரித்தது விதி தன் தொடக்கம் குறித்தது

படையுமாய் சால்வன் துவாரகை வந்தான்
எதிர்த்த பிரத்யும்னனவன் அமைச்சனைக்கொன்றான்
நீண்டு நின்றது போர் மூன்றொன்பது தினம்
நீயும் வந்தவன் விமானம் பொடித்தாய்

உன்வில்லை விலக்கினான் தன் கதாயுதத்தால்
அவன்தலை அறுத்தனை உன் சக்ராயுதத்தால்
தந்தவக்ரனும் மாய்ந்தான் உன்னால்ஆயின்
பந்தங்கள் அறுந்து உன் பதம் சேர்ந்தான்

சூழ்ச்சியால் நடத்தினர் சூதாட்டம் கௌரவர்
இழந்தான் தர்மன் தன்னை முழுவதுமாய்
திரௌபதி உள்ளிட்ட அனைவரும் அவையில்
கௌரவர் முன்னில நின்றனர் அடிமையாய்

சிரித்தன்று பரிகசித்த வஞ்சம் தீர்த்திட
உரிக அவளாடை என்றான் துரியோதனன் அவையில்
கண்ணா அண்ணனாய்க்காத்தாய் அவள் மானம்
கண்மறைவில் நின்றவள் ஆடை வளர்த்தாய்

ஒருதுண்டு கீரை உண்டு துர்வாசர் பசிதீர்த்து
திரௌபதியைக் காத்தாய் வனவாசத்தில்
பாண்டவர்க்காக நீ தூது போனாய் கண்ணா
பார்த்தனுக்காக நீ தேரோட்டி ஆனாய்

பார்த்தனும் நீயும் ஊனுமுயிருமாய்
சேர்ந்து பழகினீர் இரட்டையர் போலவே
பாரதப்போர்முனையில் பார்த்தன் கலங்கினான்
உறவை எங்கனம் கொல்வேனென்றே

எதிரி அல்ல இவர் சுற்றமும் பெரியோரும்
வேண்டாம் கண்ணா போர் என்றே பார்த்தனும்
காண்டீபம் கீழே வைத்துத் தேரில் இருந்தான்
உறவைக்கொன்றோர் உயர்வு வேண்டாமென்றான்

உயிரின் அழியாமையை உணர்த்தினாய் பார்த்தனுக்கு
ஆடைமாறுவதுபோல் ஆன்மா உடல்மாறும்
அறிவாய் அர்ச்சுனா உயிர்களுக்கழிவேது
உறவைகொல்வதுன்னை வருத்துமெனின் சொல் 

உறவென்று நினைப்பதிங்கு உயிரா உடலா
உனக்குள் நீ இதன் விடையை ஆய்வாய்
எல்லா உயிரினமும் நானே அன்றோ
என்னில் அடக்கமிந்த மூவுலகும் அன்றோ

மனதை அடக்கி நீ என்னை நினைத்தால்
மாறும் இந்தக் குழப்பம் தானே அங்கு
உன் செயலேதுமில்லை நீ வெறும் அம்பே
உன்னைச் செய்விப்பவன் நானே இங்கே

மனிதகுல தர்மம் அவன் கர்மம் செய்வதே
உன் தர்மம் இங்கு அறப்போர் செய்வதே
கர்மம் செய்வாய் கர்மபலன் ஆராயாமல்
கர்மபலன் இங்கு நான் விதிப்பதாகும்

நீ கொல்லாவிடினும் இவ்ரழிவு நிச்சயம்
நீ அறிவாய் பார்த்தா தன்வினை தன்னைச்சுடும்
உணர்ச்சி வயப்படாமல் ஒருநிலை மனதாய்
அரசகுல தர்மம் நீ காப்பாய் பார்த்தா

இங்ஙனம் கூறி பல கர்மநெறி உணர்த்தினாய்
இணையில்லா வேதமாம் கீதை தந்தாய்
பாதாதி கேசம் அங்குன் சுயரூபம் காட்டினாய்
பார்த்தனும் தெளிந்தங்கு காண்டீபம் எடுத்தான்

துரோணர் பீஷ்மருடன்  வந்தனர் கௌரவர்
துணையாய் நின்றாய் நீ பாண்டவர் பக்கம்
கணை வீசினான் கர்ணன் பார்த்தன் தலை கொய்ய
காத்தனை அவனுயிரை காலால் தேரழுத்தி

கதாயுதப்போரில் குறிப்பால் உணர்த்தியே
துரியோதனன் துடை பிளக்க வீமனுக்குதவினாய்
பெருவிரல் அளவில் கருவறை நுழைந்தாய்
கருவைக் காத்தாய் நீ உத்தரைக்குதவினாய்

12. கண்ணன் துவாரகையில்

உன்னிடம் வந்தான் ஒருபிடி அவலுமாய்
உன் பள்ளித்தோழன் குசேலனாம் அந்தணன்
தழுவினாய் தோளோடு சேர்த்தே நண்பனை
பழங்கதைகள் யாவும் நினைவு கூர்ந்தனை

ஒருபிடி அவல் வாங்கி உரிமையுடன் உண்டாய்
ஒருதினம் அவனை அன்போடு பசரித்தாய்
இரக்க மறந்தான் அவன் இன்ப அதிர்ச்சியால்
அறிந்து கொடுத்தாய் நீ அளவற்ற செல்வம் 

கம்சனால் இறந்த உன் தமையர் அறுவரை
காண விழைந்த உன் அன்னையின் ஆவலை
நிறைவேற்றினாய் நீ மகாபலி வழியே
நிறைவுடன் இறையடி சேர்ந்தாள் உன் அன்னை

ஈருருக்கொண்டு அரசன் அந்தணனை
அவரவர் இல்லத்தில் கண்டு ஆட்கொண்டாய்
அர்ச்சுனன் வந்தான் துவாரகைக்கு அங்கோர்
அந்தணன் மழலைகள் இறப்பதை அறிந்தான்

செயலற்று நிற்கிறாய் நீ என்று எண்ணியே
செருக்குடன் அவனுக்கு உதவிட விரைந்தான்
கணைக்கூட்டில் காத்தும் குழவி இறந்திட
துணிந்தான் உயிர்விட சோர்வின் அயர்வால்

தடுத்து அர்ச்சுனனை தேரில் ஏற்றினாய்
தொலைவில் மேற்கில் வைகுண்டம் அடைந்தே
அலைகடல் நடுவில் அரவப்படுக்கையில்
அலைமகளுடன் உன் திருஉரு காட்டினாய்

குழவிகளுமாய் வந்தாய் அவனுடன் துவாரகை
குந்திபுத்திரன் ஐயம் தெளிந்து மகிழ்ந்தான்
வேட்கையால் நாரதர் வேறிடம் செல்லாமல்
துவாரகை தனிலே பலகாலம் கழிந்தார்

அறிவுரை பெற்றான் அவரிடம் வசுதேவன்
அறிவுப்பயன் பெற்றான் உன்னிடம் உத்தவன் 
ஆனந்த கண்ணா ஆயர்குல திலகா 
அரிது அரிது உன் அருகாமை அரிது 

13. முனிவர் சாபம்

மாமுனி எழுவர் துவாரகை வந்தனர்
சாம்பனை பெண்ணாக்கி நிறுத்தினர் யாதவர்
கூறினர் விளையாட்டாய் அவரிடம் பொய்யை
அறிவீரோ சாம்பன் கருவுற்றான் என்றே

சினந்தனர் முனிவர் கொடுத்தனர் சாபம்
பெறுவான் அவன் ஒரு உலக்கையை என்றும்
ஆயுதமாகும் அது யாதவரிடையில் என்றும்
அழியுமதனால் யதுகுல முழுதுமென்றும்

கருவுற்றான் சாம்பன் உலக்கையும் பிறந்தது
பொடித்ததை கடலில் எறிந்து மறந்தனர்
அலையோடு புரண்டவை கரைசேர்ந்திடவே
அங்கே முளைத்தன புற்களாய் அவையே

மதுவெறி கொண்டே யாதவர் அனைவரும்
களியாடி நின்றனர் கரைதனில் ஒருநாள்
சிறுவழக்கு வளர்ந்ததன் கூர்மை கூடவே
பறித்தனர் புற்களை சினத்துடன் மோதினர்

பறித்த புற்கள் உடன் உலக்கைகளாயின
வெறி கொண்டடி ஏற்று யதுகுலம் முடிந்தது
மீனொன்று உலக்கையின் ஒருதுண்டை  விழுங்கிட
மீனவன் வழி அது அம்பாய் ஆகிட

கால தூக்கி ஓரிடத்தில் நீ அமர்ந்திருக்க
காலனாய் கால்விரலில் அவ்வம்பு தைத்ததே
வேடன் தொழுதழுது உனதடி பணிந்தான்
வேடதாரி நீ அவனை ஆதரித்தனுப்பினை

முனிவரின் சாபம் முழுதும் பலித்தது
இனிதே நிறைவுற்றதுன் அவதார நோக்கம்
அதிசயப் பிறவி நீ அஞ்சன வண்ணா
இதிகாசம் புகழுமுன் அவதாரக் கதைகள்

14. ஆலிலைக் கண்ணன்

மார்க்கண்டேய முனி மாயையை விழையவே
ஆர்ப்பரித்து வந்த ஊழிக்கடலில் வீழ்ந்தார்
அலையோடாடி நின்றே கண்டார் அவர் தூரே
ஆலமரம் ஒன்று நெடிதுயர்ந்து நின்றதை

ஆச்சர்யத்துடனே அதனடி சென்ற முனி
அருகே இலையில் ஓர் அற்புதம் கண்டார்
கொவ்வைச்செவ்வாயருகே கொண்டு சென்ற காலுடனே
கொள்ளை அழகுமாய் குழவி ஒன்றைக் கண்டார்

அணைக்கவந்த முனி அதனுள்ளே வந்துநின்றார்
அனைத்துலகும் அங்கே பரந்து கிடக்கக் கண்டார்
அடுத்த நொடி தான் ஆச்ரமத்தில் நிற்கக் கண்டார்
அலைகடலில் ஆலிலையில் நீ இருந்தாய் கண்ணா

அரனின் நாயகியாம்  மலைமகள் சோதரனே
ஆலிலைசெய் நல்வினை என்னென்று சொல்வேன் 
ஆலிலைக்கண்ணா அலைமகள் நாயகா 
கையிலை கூப்பினேன் கருநீல வண்ணா 

15. கண்ணா! நீ அழகு!

கார்முகில் வண்ணா உன்உருவம் மிக அழகு
கறுத்த தலைமுடியில் செருக்காய் ஓர் மயிலிறகு
பிறை நெற்றியில் மிளிரும் சந்தனக்குறி ஒன்று
வளைந்த இருபுருவம் தோன்றும் வில்போன்று

மலரெனச் சிரித்திடும் கருவிழிகள் இரண்டு
மறைக்காது காத்திடும் இமைகள் இரண்டு
மாங்கனியைப் பழிக்கும் மேடிட்ட கன்னம்
செதுக்கு மூக்குடன் சீரான கண்ணசைவு

மாறாத மயக்கம் தரும் மோகனப் புன்னகை
மதுரம் மணக்கும் பவளநிற உதடுகள்
சீலர் துயர் கேட்கும் சிறந்த இரு செவிகள்
கண்டேன் மாதவா குறையொன்றுமிலை இனி

தீயரை வென்று திரண்ட இருதோள்கள்
வளை அணிந்த கைகள் கை அணிந்த வேய்ங்குழல்
அலைமகள் வாழும் அழகிய திருமார்பு
சங்கொத்த கழுத்தில் துளசியொடு மணிமாலை

சந்தனம் கமழ் மேனியில் மஞ்சள் பட்டாடை
அதில் மறைந்தழகு தரும் பெருத்த துடைகள்
அகன்றழகான திருவடிகள் இரண்டு
கண்டேன் மாதவா குறையொன்றுமிலை இனி

அடிபணிந்தேன் ஆலிலையில் பள்ளிகொண்ட கண்ணா
அடியவர்க் கழிவிலா பதம் தருமுன் திருவடியில்
பாடிவந்த பதங்களிலே பிழை பொறுத்தருள்வாயே
கோடி ஜன்ம புண்ணியமே உன் நாமம் ஓதுவதே

சுபம்!




All rights reserved for the poem. Leela Narayanaswamy©