மாதமாம் மார்கழியில் வாசலில் கோலமிட்டு
மையத்தில் வைத்திடுவார் சாணம் மேல் பூசணிப்பூ
காத்திருந்த தைமாதம் நாளை என்ற நிலையில் அங்கு
வரிசையுடன் உடன்பிறந்தான் வருவான் போகியன்று
உவகையுடன் உபசரித்து மங்கையரும் மகிழ்ந்திடுவர்
உவலைதீர கூரையிலே பூளை வேப்பிலை கட்டிடுவர்
மாவிலைத்தோரணமும் வாசலை அலங்கரிக்கும்
கரும்பு வாழை மஞ்சள்கொத்து கட்டாக வந்திறங்கும்
காய்கறி புத்தரிசி கூடையிலே நிறைந்து வரும்
வானோரின் காலைதினம்பொங்கல்தினம் துவங்கி விடும்
ராசியாம் மகரத்தில் ஆதவன் அருள்செய்யும் நேரம்
கோலமிட்ட முற்றத்தில் முக்கோண அடுப்பு வைத்து
பாலுடன் புத்தரிசி பானையிலே வெந்திடவே
பொங்கிவரும் அழகு கண்டு பூரித்து ஆர்பரித்து
தங்குக இன்பம் என்று ஆண்டவனை வேண்டி நிற்பார்
புதிய அறுவடை காலமிது புத்தாண்டு பூபாளம்
இனிமையின் அனுராகம் என்றென்றும் பொற்காலம்
மறுதினம் மாக்களுக்கு நன்றி கூறும் நன்னாளாம்
மாடுகளை அலங்கரித்து பொங்கலிட்டு பூஜை செய்வர்
சல்லி கட்டி மாடுகளை ஓடவிட்டு மகிழ்ந்திடுவர்
மறக்காமல் சோதரனின் நலன் வேண்ட அதன் மறுநாள்
பச்சைமஞ்சள் குறியிட்டு மூத்தோரின் ஆசி பெற்று
கோலமிட்ட முற்றத்தில் முச்சாதம் இலையில் வைத்து
கூட்டமாய் வந்தித்து காகங்களை அழைத்திடுவர்
பழைய தீய சிந்தைகளை பொசுக்குவோம் போகியன்று
தழைத்து வளர்க நற்குணங்கள் பொங்கல் நன்னாள்தொட்டு
All rights reserved for the poem. Leela Narayanaswamy©
No comments:
Post a Comment