தன் ஒரு குழந்தையின் அவலநிலை கண்டு தமிழ் அன்னையின் புலம்பல்
பூவணிந்து பொலிவோடு நிமிர்ந்து நின்றிருந்தாய்
புலவர் போற்றும் சங்ககாலத்தன்று
செல்லக்குழந்தையாய் இருந்த நீ இன்று
செல்லாக்காசாக ஆகிவிட்டாய்
சின்னாபின்னமாய் நிலைகுலைந்தாய் உந்தன்
தனித்தன்மையை நீ இழந்து நின்றாய்
உன்னை ஏன் இன்று பலரும் ஏற்கவில்லை?
உன் சப்தம் யாருக்கும் ஏன் பிரியமில்லை
தமிழனின் நாவுனக்கு காலனாய் வந்ததேன்?
அழித்துனை அருவமாய் ஆக்கி மகிழ்வதேன்?
ஏறும்பூர்ந்து கல்லும் தேயும் என்பார் தமிழனின்
நாவூர்ந்து நீ இன்று தேய்ந்தனையே.
அழகிய நீ இப்போது அழகில் இல்லை
பழத்தில் நின்றும் உன்னை நீக்கிவிட்டார்
வாழையில் நீ இல்லை செய்த பிழை அறியேனே
வழியிலும் நீ இல்லை கதி இன்றி நிற்கின்றாய்
உன் இடத்தில் "ள"வந்தாள் உனைத் தொலைத்த இடம் எங்கே?
அழுகையில் நீ இல்லை அதனால் நான் அழவில்லை
"தழை"ல் நீ இல்லை "தளை"இட்டு வைத்தார்கள்
குழந்தையில் நீ இல்லை குழந்தை நீ எங்கே சொல்
எழுத்தா? எளுத்தா? மொழியா? மொளியா?
எங்கும் உனைத்தேடி நான் மௌனமாய் கரைகின்றேன்
All rights reserved for the poem. Leela Narayanaswamy©
No comments:
Post a Comment