Thursday, March 4, 2010

17.ஆஞ்சநேயா சரணமய்யா

ஆஞ்சநேயா சரணமய்யா
அஞ்சனைதன் தவப்புதல்வா
வாயுதேவன் திருக்குமரா நீ
வானரகுலத் திலகமப்பா

ஐந்து இளம் வயதினிலே
அருணன் மேல் பாய்ந்தோனே
இந்திரனின் ஆயுதத்தால்
முகம் மாறி நின்றோனே
முத்தேவரின் முத்தருளால்
முழுவாழ்வு பெற்றவனே
முனிவர்கள் போற்றும்
ஸ்ரீராமனுக்கு உகந்தவனே

தூய்மைமிகு வாய்மையனே
அய்யா சொல்லின் செல்வனே
பொய்கைவளர் தாமரைக்கண்
கொண்ட ராமன் தூதுவனே
பாயும் அலைகடலினையே
பாய்ந்து தாவிக் கடந்தவனே
தாயாகும் சீதையவள்
துயர் தீர்த்த குணவானே

தாசரதி தூதுவனாய்
அசுரபதி ராவணனின்
சபைதனிலே சரிசமமாய்
வாலிருக்கையிட்டு அமர்ந்தவனே
தீயவனாம் லங்காதிபனுன்
வாலில் வைத்த தீ கொண்டே
பாய்ந்து பறந்து நகரினையே
நெருப்பினிரை ஆக்கினையே

கண்டேன் அன்னை சீதையையே
என்ற நல்ல சேதியுடன்
கொண்டல் வண்ணன் ராமனையே
மகிழ்வித்த மாருதியே
அகமகிழ்ந்த ஸ்ரீராமன்தன்
அன்பணைப்பில் உய்ந்தவனே
அண்ணலுடன் ஓர் இலையில்
பகிர்ந்துண்ட பெருமானே

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

No comments:

Post a Comment