Sunday, June 27, 2010

35.அகாரரூபிணி

அகாரரூபிணி ஆடிவாராய் அம்மா
அகிலம் காக்க இங்கு ஓடிவாராய்

ஆடும் நடேசனுடன் இணைந்து வாராய் -நீ
ஆனைமுகன் தாளமிட பாடி வாராய்

இகபர சுகம் நல்கும் இன்பமே நீ
இடக்கையில் சூலமேந்தி ஆடி வாராய்

ஈசனுடன் இடம் இணைந்த ஈஸ்வரியே -நீ
பாசமிகு வேலனுடன் பக்கல் வாராய்

உலகாளும் உமையவளே சுந்தரியே அம்மா
உலகளந்தோன் சோதரியே ஆடி வாராய்

ஊக்கமுடன் வாத்தியங்கள் முழங்கிடவே -நீ
ஊர்மக்கள் புடைசூழ தேரில் வாராய்

எங்கும் நிறை மறைரூபிணியே -நீ
பாங்காய் பதம் எடுத்து ஆடி வாராய்

ஏகாம்பரன்தேவி ஏந்திழையே என்னில்
மோகங்கள் களைந்திட தேடி வாராய்

ஐங்கரன் அன்னையே ஆதிசக்தி நீ
பூங்கரத்தில் கரும்பேந்தி ஆடி வாராய்

ஓட்டும் பாசவலை அறுத்து என்னை உன்
பட்டுக்கரம் தொட்டு காக்க வாராய்

ஓங்கார ரூபிணி ரீங்காரியே எங்கள்
அகங்காரம் களைந்திட ஆடி வாராய்

ஔவை தமிழ்ப்பாட்டில் மகிழ் அன்னையே தேவி
கௌரி கௌமாரி பாடி வாராய்

அம்மெனும் எழுத்தின் ஆதாரமே அம்மா
இம்மையின் வெம்மையை நீக்க வாராய்

ஆயுத எழுத்தில் மிளிர் அந்தரியே அம்மா
சேய் எனைகாத்திடவே தேடி வாராய்

காதணியை முழுமதி ஆக்கிய அபிராமியே அம்மா
மீதமற முன்வினைகள் தீர்க்க வாராய்

மதுரை வாழ் மாதரசே மீனாட்சியே நீ
மதுரமூறும் தமிழ்கீதம் கேட்க வாராய்

நாதலய நட னமதில் லயிப்பவளே அம்மா
பாதசரம் இசை எழுப்ப அசைந்து வாராய் (அகாரரூபிணி )
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

No comments:

Post a Comment